புதுடில்லி: கொரோனாவின் புதிய உருமாறிய வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளதால், கண்காணிப்பு முறைகளை உலக நாடுகள் வலுப்படுத்த வேண்டும் என, உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில், 2019 இறுதியில் முதல் முதலில் தென்பட்ட கொரோனா வைரஸ், உலகெங்கும் பரவி, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
தடுப்பூசி
இதற்கிடையே, கொரோனா வைரஸ் பலமுறை உருமாறியுள்ளது.
தற்போது, ஜெ.என்.1 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் திடீரென அதிகரித்துள்ளது. குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இதன் பரவல் அதிகமாக உள்ளது.
இது குறித்து, உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய மண்டல இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங், நேற்று கூறியுள்ளதாவது:
பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதால், கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்தது. இதையடுத்து, உலக அளவில் பெரும் சுகாதார பிரச்னை என்ற நிலையில் இருந்து கொரோனா விடுபட்டுள்ளதாக, கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், கொரோனா வைரஸ் பல வகைகளில் உருமாறி வருகிறது. உலகெங்கும் பரவலாக இருந்தாலும், இதனால், பெரிய பாதிப்புகள் இல்லை. மேலும் பரவல் வேகமும் குறைவாகவே உள்ளது.
ஆனால், தற்போது பல நாடுகளில் குளிர்காலம் துவங்கியுள்ளது. இதையடுத்து, ‘புளு’ வகை காய்ச்சல்களும், ஜெ.என்.1 என்ற உருமாறிய கொரோனா வைரசும், தற்போது வேகமாக பரவி வருகின்றன.இந்த புதிய கொரோனா, அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், உலக நாடுகள், குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நடவடிக்கை
பரவலைத் தடுப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும், கண்காணிப்பு முறைகளை பலப்படுத்த வேண்டும். தேவையான மருந்துகள் உள்ளிட்டவை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

