காற்றாலை மின் உற்பத்தியில் முதலிடத்தில் இருந்த தமிழகத்தை பின்னுக்குத் தள்ளி குஜராத் முதலிடத்திற்கு வந்துள்ளது. குஜராத்தின் காற்றாலை மின் உற்பத்தி திறன் – 10,899 மெகாவாட், தமிழகத்தின் உற்பத்தித் திறன் – 10,153 மெகாவாட். இந்தியாவின் ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தித் திறன் – 43,773 மெகாவாட்.
காற்றாலை மின் உற்பத்தியில் குஜராத் முன்னுக்கு வர காரணங்கள் –
• வளர்ச்சிக்குத் தேவையான கொள்கை முடிவுகள்
• உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது
• பண உதவி தாமதமின்றி உடனடியாகக் கிடைப்பது
• காற்றாலை உரிய இடங்களில் அமைக்க குறைந்த விலையில் நிலம் கிடைப்பது (தமிழகத்தில் அனைத்து காற்றாலை மின் உற்பத்தி இடங்களும் கைப்பற்றப்பட்டுவிட்டன)
• காற்றாலைகளை கூடுதல் சக்தியாக்க தனி கொள்கை முடிவுகள், காற்றாலை மின் உற்பத்தியை பெருக்க தனி கொள்கை முடிவுகள் அங்கு உள்ளன.
• காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான மானியங்களை உரிய நேரத்தில் வழங்குவது.
இவையனைத்ததையும் தமிழக அரசு கவனிக்கத் தவறி செய்யாமல் விட்டதாலேயே முதலிடத்தில் இருந்த தமிழகம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தற்போதையை காற்றாலை மின் உற்பத்தி தற்போது அதிகபட்சமாக 4,000 மெகாவாட் என்ற அளவில் உள்ளது.
தமிழக காற்றலை மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, காற்றாலை இறக்கைகளின் திறனை அதிகப்படுத்தவும் (Efficiency), இறக்கைகளின் அளவை பெரிதாக்கி, கூடுதல் மின் உற்பத்தி பெறவும், ஆற்றல் திறனை மாற்றியமைக்கும் (Repowering Policy) கொள்கை முடிவுகளை முறையாக தமிழக அரசு உருவாக்க தவறியும், அதற்கான மானிய உதவிகளை வழங்கவும், உரிய நேரத்தில் பண உதவி செய்ய வழிவகை செய்யவும் தமிழக அரசு முன் வராதது எப்படி சரியாகும்?
மேலும் 20-25 ஆண்டுகளுக்கு காற்றாலை இறக்கைகளை மாற்றாமல் இருப்பதால் பழுதுகள் நிகழ்வதும், 250 கிலோவாட் மின் உற்பத்தியை மாற்றும்போது உற்பத்தியாகும் மின் ஆற்றலை சேமித்து வைக்கவும் (Banking facility), நெடுந்தொலைவிற்கு ஆற்றலைக்கொண்டு செல்லவும் வசதிகளை அரசு எற்படுத்தித் தராமல், உற்பத்தியாளர்கள் தலையில் அந்த சுமையை கட்டுவதால், உற்பத்தியாளர்கள் அதை சாதமாக பார்ப்பதில்லை. மாறாக பாதகமாகப் பார்ப்பதால், உற்பத்தியாளர்கள் காற்றாலை உற்பத்தி திறனை அதிகரிக்க வழிவகை இல்லாமல் போகிறது.
மொத்தத்தில் காற்றாலை மின் உற்பத்தியில் முதலீடு செய்தவர்களுக்கு சாதகமான சூழல் தமிழகத்தில் முற்றிலும் இல்லாது போனதை தமிழக அரசு கவனத்தில்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வந்தால் மட்டுமே விடிவுகாலம் பிறக்கும்.
காற்றாலை மின் உற்பத்தி புவி வெப்பமடைதலை குறைக்க உதவும் என்பதால், அதற்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டாமா? என மருத்துவர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

