Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK: `திமுகவை போல பாஜகவையும் எதிர்ப்பாரா விஜய்?’ – முதல் மாநாடும் மூத்த பத்திரிகையாளர்கள் பார்வையும்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2024
in அரசியல் செய்திகள்
0
TVK: `திமுகவை போல பாஜகவையும் எதிர்ப்பாரா விஜய்?’ – முதல் மாநாடும் மூத்த பத்திரிகையாளர்கள் பார்வையும்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. அவரின் கொள்கைகள், செயல்திட்டங்கள் விளக்கப்பட்டுள்ளன.

விஜய்யின் உரை அவரின் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. அரசியல் களத்தில் அனைவராலும் கவனிக்கப்பட்டது. விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல்கள் எழுந்திருக்கின்றன. விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை.

“திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள்”, ஆட்சி அதிகாரத்தில் பங்கு, பிரிவினைவாதம் செய்பவர்களும், ஊழல் கபடதாரிகளும் த.வெ.க-வின் இரண்டு எதிரிகள் என விஜய் பேசிய கருத்துகள் மற்றும் அவரது மாநாடு குறித்து முன்னணி பத்திரிகையாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தோம்.

நியூஸ் மினிட் தளத்தின் மூத்த செய்தி ஆசிரியர் ஷபீர் அகமது பேசியதிலிருந்து…

`விஜய்யின் சினிமா பாணி பேச்சும் கருத்தியலும் குறித்து…”

“விஜய்யின் தொனி குறித்து அதிகம் பேசப்படுகிறது. படங்கள், ஆடியோ லான்ச்களைத் தாண்டி விஜய் எப்படி பேசுவார் என்று நமக்குத் தெரியாது. விஜய் அரசியல் ரீதியாக அவரின் புரிதல்களை முதல்முறையாக இப்போதுதான் பேசியிருக்கிறார். தன்னை ஒரு அரசியல் முதிர்ச்சியுள்ள தலைவராக வெளிப்படுத்தியிருக்கிறார். இதை வைத்து அவரை ஏற்றுக்கொள்ளவோ புறக்கணிக்கவோ முடியாது. அவரின் செயல்பாடுகளின் வழியாகதான் அவர் ஆதரவு திரட்ட முடியும்.

அரசியல் தலைவர்கள் எல்லாருக்கும் வெவ்வேறான பாணி இருக்கும். சினிமா பாணியில் பேசுகிறார், ஒப்பிக்கிறார் என்று விவாதத்திப்பதற்கு பதில், அவரது கருத்துக்களை விவாதிப்பது சரியாக இருக்கும்.”

ஷபீர் அகமது

`கூட்டணி அரசியல்!’

“கூட்டணி அரசியலைப் பொருத்தவரை, யாரும் ஒரே கொள்கையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. சீமானுக்கு ஒரு கொள்கை, விஜய்க்கு ஒரு கொள்கை. இடதுசாரி கட்சிகளின் கொள்கைகள் – திமுகவின் கொள்கைகள் – காங்கிரஸின் கொள்கைகள் வெவ்வேறானவை. ஆனாலும் அவர்களின் செயல்திட்டங்கள் பொதுவான தளத்தில் இணைவதால் கூட்டணியில் இருக்கின்றனர். கட்சிகளுக்கு கொள்கை இருந்தாலும் இந்த பொதுவான தளத்தில்தான் கூட்டணி அரசியல் இயங்குகிறது.

விஜய்யின் அரசியலில் என்னென்ன விஷயங்களுக்கு பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதைப் பொருத்து அவருக்கு மக்கள் ஆதரவு கூடினால் யார் வேண்டுமானாலும் இணைவார்கள். இதில் ஆட்சி அதிகாரத்திலும் பங்கு என்று விஜய் கூறியதுதான் சிறப்பான ஒன்று. ஆனாலும் யார் உறுதியாக விஜய்யுடன் கூட்டணி அமைப்பார்கள் என்பதை இப்போதே கூறமுடியாது. அது தேர்தல் நெருங்கும் வேளையில்தான் தெரியவரும்.

திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனால் திமுக, அதிமுக கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற நிலைக்கு இறங்கி வரலாம். நிச்சயம் கூட்டணி கட்சிகளுக்கு விஜய் ஒரு ஆப்ஷனாக இருப்பார்.”

“அதிமுகவின் இடத்தை நிரப்பும் தவெக!”

“தமிழ்நாடு அரசியல் எப்போதும் இருதுருவ அரசியலாகத்தான் இருந்திருக்கிறது. திமுக எதிர்ப்பு என்பது அதிமுகவின் அதிமுக்கியமான தேர்தல் யுத்தி. விஜய் கூறும் கொள்கைத் தலைவர்களை திமுகவினரும் ஏற்றுக்கொள்வார்கள், அதிமுகவினரும் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இருவரும் பரஸ்பரம் அரசியல் எதிரிகளாக இருக்கின்றனர். அதிமுகவின் அரசியல் யுத்தியை விஜய் கையில் எடுப்பது அதிமுகவுக்குதான் பின்னடைவாக இருக்கும்.

ஏற்கெனவே திமுக எதிர்ப்பை அதிமுக வீரியமாக பேசாததால் பாஜக, பாமக போன்ற கட்சிகள் நாங்கள்தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம் என சொல்லிக்கொள்கின்றன. ஜெயலலிதா இருந்த காலத்தில் யாரும் இப்படி சொல்லிவிட முடியாது. விஜய் பேசிய திமுக எதிர்ப்பு, தமிழ்நாடு அரசியலில் அதிமுகவின் இடத்தை நிரப்பும் கட்சியாக தன்னை முன்னிறுத்தும் யுத்தியாகவும் செயல்படலாம்.

பாஜக எங்களுக்கு சித்தாந்த ரீதியான எதிரி எனக் கூறியுள்ளார் விஜய். இதைவைத்து அவர் பாஜகவுடன் கூட்டணி சேரமாட்டார் என்று எடுத்துக்கொள்ளலாம். அரசியல் எதிரியாக திமுகவை முன்னிறுத்துவது அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை பாதிக்கும். திமுக எதிர்ப்பால் பொது மக்கள் ஆதரவையும் சம்பாதிக்க முடிந்தால் திமுக கூட்டணி கட்சிகளையும் விஜய் கவரமுடியும்.”

விஜய்

`திமுகவை விட வலுவாக பாஜகவை எதிர்க்க வேண்டும்!’

“தமிழக அரசியலில் திமுக எதிர்ப்பைப் போலவே பாஜக எதிர்ப்பும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. திமுகவின் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்த பாஜக எதிர்ப்பையும் வீரியமாக பேசவேண்டும். விஜய் அதை நோக்கி நகர்வார் என்று எதிர்பார்க்கலாம்.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்தபோது சிறுபான்மையினர் வாக்குகளை முழுமையாக கைப்பற்ற முடியும் என்று நம்பினார்கள். ஆனால் அவர்களால் சிறுபான்மையினர் மத்தியிலும் பிற மக்கள் மத்தியில் அந்த உறுதியாக பாஜகவை எதிர்ப்போம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த முடியவில்லை. மீண்டும் அவர்கள் பாஜக கூட்டணியிலேயே இணைவார்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தது. விஜய் பேசியவற்றை பெயல்படுத்தி அந்த நம்பிக்கையை பெற வேண்டும். திமுகவை விட வலுவாக பாஜக எதிர்ப்பை முன்னிறுத்தினால் மக்கள் அவர்பக்கம் திரும்பலாம். விஜய்யின் நடவடிக்கைகளைப் பொறுத்தே நாம் ஒரு புரிதலுக்கு வர முடியும்” என்றார்.

மூத்த பத்திரிகையாளர் இந்திரகுமார் தேரடியிடம் விஜய் மாநாடு குறித்து பேசினோம்…

`B டீமா? C டீமா?’

“A டீம், B டீம், C டீம் என்பதை விஜய் களத்துக்கு வந்து அவருடைய செயல்பாடுகள் யாருக்கு சாதகமாக இருக்கின்றன என்பதைப் பார்த்தபிறகுதான் பேச முடியும். அடிப்படையில் அவர் பாஜக எதிர்ப்பை பேசும்போது பிளவுவாதத்துக்கு எதிராகத்தான் பேசினாரே தவிர பாஜக எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்யவில்லை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது புரட்சிகர தத்துவம் அல்ல; அது அடிப்படையானது. ஆனால் அதனைப் புரட்சிகரமானது என்று நாம் கொண்டாடக் காரணம், பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கிற சனதான பாசிச அரசியல் நடத்துகின்ற ஒன்றிய அரசு.

நவீனச் சமூகத்திலும் பிறப்பின் அடிப்படையில் பேசுகின்ற சக்திகள் இருக்கின்ற காரணத்தால் தான், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கருத்து புரட்சியாகிறது. ஆனால் பாசிசம் பாயாசம் என்று பாசிசத்தைத் தள்ளி வைக்கிறார் விஜய்.

திராவிட மாடல் என்பது முகமுடி அதனுள் ஊழல்தான் இருக்கிறது என்று பேச முடிந்த அவரால், பிளவுவாத அரசியலுக்கு பின்னிருப்பவர்கள் யார் என்று வெளிப்படையாக பேசமுடியவில்லை. பிளவுவாத அரசியல் என்பது சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறையாக மாறியிருக்கிறது. நீங்கள் அம்பேத்கரை பக்கத்தில் வைத்துக்கொண்டு ‘நான் சிறுபான்மை – பெரும்பான்மை என்று பேசமாட்டேன்’ என்று கூறுவது யாருக்கு லாபமாக அமையும்? அவருடைய அரசியல் குழப்பமாக இருக்கிறது. அடையாளங்களை முன்னிறுத்தினால் மக்களை கவரலாம் என நினைக்கிறார். அவருக்கு சித்தாந்தத் தெளிவோ, கொள்கைத் தெளிவோ இல்லை.

திமுக பேசும் மாநில உரிமையைத்தான் விஜய் பேசுவார் என்றால், திமுகவை விட வலுவாக பேச வேண்டும். திமுகவை விட அதிக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அறிக்கை கொடுத்தால் போதும் என நினைத்துவிடக் கூடாது.

Indra Kumar Theradi

`சீமானுக்கு ஆபத்து’

“சீமானின் அடிப்படை கொள்கையையே விஜய் கேள்விக்குள்ளாக்குகிறார். திராவிடமும் தமிழ்தேசியமும் எனது இரு கண்கள் என்று பேசியுள்ளார். ஆளும் அரசின் மீதான அதிருப்தியால் நாதகவுக்கு கிடைக்கும் வாக்கு வங்கியை விஜய் தன்பக்கம் இழுக்கிறார். ‘புதியதாக அரசியலுக்கு வரும் இளைஞர்களை ஈர்க்கும் நிலையில் நாம் இருக்கிறோம்’ என்று நினைக்கும் சீமானுக்கு விஜய் ஆபத்தாக உள்ளார். வேலுநாச்சியார் போன்ற வரலாற்றுக்கால தலைவர்களை தான் மட்டுமே முன்னிறுத்துவதாக சீமான் கருதிக்கொள்கிறார். இதிலும் சீமானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறார். ”

`ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’

“ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை ஆட்சியில் இருக்கும் கட்சியோ அல்லது ஏற்கெனவே ஆட்சியில் இருந்த கட்சியோ பேசினால் அதன் மதிப்பு வேறு. விஜய் புதிதாக களத்துக்கு வருபவர். ஒருவேளை விஜய் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கவில்லை என்றால் அவரை நம்பி செல்லும் சிறிய கட்சிகளுக்கு அது சிதைவைத்தான் கொடுக்கும். இதனால் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியே!”

TVK Maanadu

`தலைவர்கள் வேண்டும்… நிர்வாகிகள் அல்ல!’

“தவெகவின் உட்கட்டமைப்பைப் பொருத்தவரையில் விஜய் நிர்வாகிகளைத்தான் முன்னிறுத்துகிறார். தலைவர்களை முன்னிறுத்தவில்லை. திமுக – அதிமுகவின் பலமே அதன் உள்ளூர் தலைவர்கள்தான். வெறும் நிர்வாகிகளை வைத்து அவர்களை வெல்ல முடியாது.

திமுக-வை வீழ்த்த திமுகவைவிட வலுவான அரசியல் கட்டமைப்பு வேண்டும். உதாரணமாக கரூர் என எடுத்துக்கொண்டால், அங்கு செந்தில் பாலாஜி வலுவான தலைவராக உள்ளார். அவரை வீழ்த்த அந்த பகுதியில் அவரைவிட வலிமையான தலைவர் தேவை. இதேப்போல ஒவ்வொரு பகுதிக்கும் தலைவர்கள் உள்ளனர். விஜய் தனது முகத்துக்காகவே 234 தொகுதிகளிலும் வாக்கு கிடைத்துவிடும் என நம்பினால் அது தோல்வியடைவே வாய்ப்பு அதிகம்.

மாநாடு மேடையிலேயே விஜய் மட்டுமே ஃபோக்கஸில் இருந்தார். மற்ற மாவட்ட நிர்வாகிகள் ஓரமாக உட்காரவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு எந்த லைம் லைட்டும் இல்லை. மேடையிலேயே அறிமுகப்படுத்தபடாத நிர்வாகிகளா திமுக மாவட்டச் செயலாளர்களை வெல்லப்போகிறார்கள்? உள்ளூர் தலைவர்களை விஜய் உருவாக்குவது அவசியம். அதுதான் அவர் வெற்றிக்கு அடித்தளமாக அமையும். ”

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs



.

Previous Post

ஆளுநர் பங்கேற்பு, உயர்க்கல்வி அமைச்சர் புறக்கணிப்பு!

Next Post

தீபாவளி: மூன்றரை நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தீபாவளி: மூன்றரை நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில்!

தீபாவளி: மூன்றரை நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In