திருச்சியில் நேற்று மின்கட்டண உயர்வு பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “வீட்டு மின் இணைப்பைப் பொறுத்தவரைக்கும் எந்தக் கட்டணமும் உயர்த்தவில்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும். வணிகம் மட்டும் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும், 13 பைசா முதல் 21 பைசா வரை உயர்வு இருக்கும். மற்ற மாநிலங்கள் இதைவிட அதிகம். அதிமுக ஆட்சியில் செங்குத்தாக மின் இணைப்பு கட்டணம் உயர்த்தப்பட்டன” என்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா இது தொடர்பாக கூறியதாவது, “ஏழு மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வு அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன் மீண்டும் மின் கட்டண உயர்வு என்பது ஏற்புடையதல்ல. ஏற்கனவே நொடிந்து போய் உள்ள வணிகர்கள், தொழில் முனைவோர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் உற்பத்தி பாதிப்பு பொருள்கள் மீதான விலைவாசி உயர்வு என ஒவ்வொரு கட்டத்திலும் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் இருப்பதை அறிந்து தமிழக அரசு பரிசீலித்து தற்போது அறிவித்துள்ள வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை முழுமையாக நீக்கி அறிவித்திட அனைத்து உற்பத்தியாளர்கள் தொழில் முனைவோர் மற்றும் வணிகர்கள் சார்பில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மிகுந்த அழுத்தத்துடன் வலியுறுத்துகின்றது” என்கிறார்.
இந்த மின்கட்டண உயர்வு வீட்டு இணைப்புகளுக்கு கிடையாது, அதனால் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என முதல்வர் தொடங்கி ஆளும் தரப்பில் அனைவரும் விளக்கமளிக்கிறார்கள். ஆனால், நேரடியாக மக்கள் பாதிக்கப்படவிட்டாலும் விலைவாசி உயர்வு என மறைமுகமாக இது பொதுமக்களைப் பாதிக்கும் என்பது மட்டும் தெளிவாகிறது.!

