கடந்த 28/7/2025 அன்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களில் ஐந்து பேர் மற்றும் பாம்பன் மீனவர்கள் ஒன்பது பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைபிடித்துச் சென்றனர்.
மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் தொடர்பாக, கைதான மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினோம். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர் ஜஸ்டின் என்பவரின் மனைவி நம்மிடம் பேசுகையில், “இரவு 10 மணி அளவில் ராமேஸ்வரத்தில் கச்சத்தீவு அருகே எங்களுடைய படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த என் கணவர் ஜஸ்டின், என்னுடைய மகன் மோவின் உட்பட 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். என்னுடைய கணவரையும், எனது மகனையும் ஒரே நேரத்தில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களுடைய முதல் படகு இலங்கை கடற்படையால் அழிந்து போனது.
இப்போது தமிழக அரசு கொடுத்த நிவாரண உதவியுடன் எங்கள் வீட்டை தனியார் வங்கியில் அடமானம் வைத்துதான் புதிய படகு வாங்கினோம். புதிய படகிற்கு வாங்கின கடன் அப்படியே உள்ளது. அதற்குள்ளே இப்படி என்றால் நாங்கள் என்ன செய்வது? எப்படி கடனை அடைப்பது? வாழ என்ன செய்வது? எனது இரண்டாவது மகன் கல்லூரியில் படித்து வருகிறான். தற்போது அவனது படிப்பிற்கான செலவை என்னால் எப்படி செலுத்த முடியும்? என் பெண் பிள்ளைக்கு எப்படி திருமணம் செய்து வைப்பது தெரியவில்லை ஒன்னும் புரியவில்லை” எனக் குமுறியவரின் கண்களில் கண்ணீர் கசிந்தது.
மீனவர் ஜஸ்டினின் இளைய மகன், “என்னுடைய அப்பா மற்றும் என்னுடைய அண்ணன் இருவரும் ஒரே நேரத்தில் இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் உடனடியாக வரவில்லை என்றால் அவர்களுடைய இடத்தில் நான்தான் மீனவ தொழிலை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் . அப்படி நான் தொடங்கினாலும் என் அப்பா அண்ணனின் நிலை எனக்கு வராது என்பது என்ன நிச்சயம்? என் தங்கையின் கல்யாணம் என்ன ஆகும்? நான் படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது என் கனவு. என்னுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிட்டதே!” எனத் தன் வேதனையை வெளிப்படுத்தினார்.
