சரி, ஜூன் 27 பகல் 11 மணியளவில் கோவிலுக்கு வந்திருக்கிறார் நிகிதா. வாய்வழிப் புகாரைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிவாக்கில் அஜித் குமாரைக் காவலர்கள் அழைத்துச் சென்றிருக்கின்றனர்; மறுநாள் இரவு, ஏறத்தாழ 27 மணி நேரத்தில், அவர் கொல்லப்பட்டுவிட்டார்.
எங்கள் கணவர்கள், மேலிடத்தில் சொன்னதைத்தான் செய்தார்கள், உத்தரவுக்குப் பணிந்தார்கள். சம்பந்தப்பட்டவர்களைத் தண்டியுங்கள். எங்கள் வீட்டுக்காரர்களை மட்டும் குற்றவாளியாக்காதீர்கள் என்று காவல்நிலையம் முன் மறியல் செய்த கொலைக் குற்றக் காவலர்களின் குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.
சொன்னதைச் செய்தார்கள் என்பதற்காகக் குற்றம் அல்ல என்றாகிவிடாது. ஆனாலும், குடும்பத்தினர் சொல்வதைப் போல, எய்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு, வெறும் அம்புகளை மட்டுமே சிக்க வைப்பதும் நியாயமாக இருக்க முடியாதுதானே!
கொலைக்குக் காரணம் தனிப்படை என்றால், அந்தத் தனிப்படைக்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் இடத்தில் இருப்பவர் மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம். அவருக்கு உத்தரவிடக் கூடிய அடுத்த நிலையில் இருப்பவர் (சிவகங்கை) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத். ஒருவேளை அவர் அல்லர் என்றால் அவருக்கும் மேலேயிருந்து யாரோ ஒருவர் அல்லது சிலர் அறிவுறுத்தியிருக்கலாம்.
[டிஎஸ்பி பார்ட்டி போல டிஐஜி பார்ட்டி, அவருடைய பார்ட்டி, இவருடைய பார்ட்டி என்று நிறைய தனிப்படைகள் இருக்கின்றனவாம். இவர்கள் எல்லாம் சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு யார் சொன்னாலும் கண்டுகொள்ள மாட்டார்களாம். இவற்றையெல்லாம்தான் கலைக்குமாறு தற்போது அறிவுறுத்தியுள்ளார்கள். இந்த ஸ்பெஷாலிட்டியால்தான் அஜித் குமார் கொலையில் திருப்புவனம் காவல்நிலையத்துக்குப் பொறுப்பான ஆய்வாளர், உதவி ஆய்வாளர் எல்லாம் சீனிலேயே காணவில்லை போல].
ஆக, நிகிதா நுழையும் ஜூன் 27 பகல் 11 மணி தொடக்கம் அஜித் குமார் சாவுக்கு மறுநாளான 29 ஆம் தேதி பகல் 11 மணி வரையிலான 48 மணி நேரத்தில் நிகிதா, தனிப்படைக் காவலர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர், காவல் கண்காணிப்பாளர் (மற்றும் இவர்களின் உதவியாளர்கள்) ஆகியோருடைய தொலைபேசி / அலைபேசிவழி / வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளின் பட்டியலை வைத்துப் பார்த்தாலே கொலைக் குற்றப் பட்டியலில் இன்னும் சேர்க்கப்பட வேண்டியவர்கள் யார் யாரெனத் தெளிவாகத் தெரிய வந்துவிடலாம்! இன்றைய நிலையில் கண்டிப்பாக மக்களுக்கு இவர்களைத் தெரியப்படுத்தவும் வேண்டும்.
காவல் அதிகாரிகள் என்பதற்காக இடைநீக்கம் செய்வதும் காத்திருப்பில் வைப்பதுமே தண்டனைகளாகிவிடாது. நிச்சயமாக, உத்தரவிட்டதாக யாரையும் தனிப்படைக் காவலர்கள் சொல்லப் போவதில்லை, ‘விசாரிப்பதற்காக அடித்தோம், தவறுதான், அவர் செத்துப்போய்விட்டார், கொலை செய்யும் நோக்கமில்லை’ என்றுதான் கூறுவார்கள். அவர்களுக்கு நன்றாகத் தெரியும், கடைசி வரையிலும் அவர்களைக் காப்பாற்றத் தேவையான அனைத்தையும் காவல்துறையும் அரசு எந்திரமும் செய்யும் என்பது – ஆளுங்கட்சியாக யார் இருந்தாலும்!
2020 ஜூன் 22-ல் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகளான பிறகும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
2018 மே 22-ல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் பட்டப்பகலில் துள்ளத் துடிக்கக் காக்கை குருவிகளைப் போல 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட அநியாயத்தில் குற்றவாளிகளான காவல்துறையினர் இன்னமும் எவ்வாறெல்லாம் அதிகார அமைப்புகளால் காப்பாற்றப்படுகிறார்கள் என்பது தொடர்ந்து கவனிப்போருக்குத் தெரியும். பாவம், நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை கமிஷன்!