Last Updated:
இந்த டெக்னிக் உள்ளூர் விவசாயிகளிடையே பிரபலமடைந்து வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டோண்டா பகுதியில் உள்ள வயல்வெளிகளை வண்ணமயமான புடவைகள் கொண்டு வயல்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன.
முதலில் அந்த காட்சியை பார்க்கும் போது, சரி சில சலவைக்காரர்கள் புடவைகளைத் துவைத்து உலர்த்தி வைத்திருக்கிறார்கள் என்றே தோன்றும். ஆனால் கூர்ந்து கவனித்தால் இதற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. நாடு முழுவதும் கோடை காலம் துவங்கி இருக்கும் நிலையில், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், புர்ஹான்பூர் மாவட்டத்திலும் கூட கடும் வெப்பம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் சமீப நாட்களாக நிலவி வரும் கடுமையான வெப்பத்திலிருந்து பயிர்களை பாதுகாக்கவே விவசாயிகள் சேலைகளை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த டெக்னிக் உள்ளூர் விவசாயிகளிடையே பிரபலமடைந்து வருகிறது. இதனிடையே இப்பகுதியை சேர்ந்த விவசாயியான பிரமோத் பேசுகையில், புர்ஹான்பூரில் வெப்பம் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. இது தற்போது இப்பகுதியில் பயிரிடப்படும் மக்காச்சோளம், கரும்பு மற்றும் வாழை போன்ற பயிர்களின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்றார்.
மேலும், கடும் வெயிலை எதிர்த்து போராடி தங்கள் பயிர்களை பாதுகாக்கவே விவசாயிகள் அவரவர் வயல்களின் எல்லைகளை ஒட்டி, நேரடி சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்கும் வகையில் சேலைகளை கட்டி சுற்றி வைத்துள்ளார்கள் என்றார். இந்த டெக்னிக்கை செயல்படுத்த உதவக் கூடிய புடவைகள் ஒவ்வொன்றும் ரூ.20 முதல் 30 வரையிலான விலையில் வாங்கப்படுகின்றன. மேலும் பொதுவாக ஒரு முழு வயலையும் சேலைகளால் கவர் செய்ய சுமார் ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை செலவாகிறது என்றார்.
எனினும் இந்த புடவைகளை பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்தலாம். இது ஒரு மலிவான தீர்வாக இருக்கிறது என்றும், இறுதியில் எங்களுக்கு சிறந்த பயிர் மகசூல் மற்றும் லாபம் கிடைக்க வழிவகுக்கிறது என்றும் விவசாயி பிரமோத் கூறினார். இந்த ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை பின்பற்றுவதன் மூலம், புர்ஹான்பூரில் உள்ள விவசாயிகள் சவாலான வானிலை நிலைமைகளுக்கு மத்தியில் தங்கள் பயிர்களை திறம்பட பாதுகாத்து, வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார்கள்.
இதனிடையே வேளாண் நிபுணர்கள் பேசுகையில், பொதுவாக பயிர்களை காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும், பல இடங்களில் விவசாயிகள் சேலைகளைப் பயன்படுத்தும் இந்த நுட்பத்தை செயல்படுத்தி வருகிறார்கள். மனிதர்களின் நடமாட்டம் இருப்பதாக கருதி விலங்குகள் வயல் பகுதிகளுக்குள் நுழைய அச்சம் கொள்ளும் என்பதால் விலங்குகளின் தாக்குதல்களிலிருந்து பயிர்களை காப்பாற்ற நினைக்கும் விவசாயிகள் இதனை செயல்படுத்துகின்றனர் என்கின்றனர்.
March 27, 2025 7:19 AM IST

