இந்தப் பாதுகாப்பு ஒத்திகையின் மூலம், போர் அல்லது அவசர காலத்தில் மக்கள் எப்படி தயாராக வேண்டும் என்பது கற்றுக்கொடுக்கப்படும். பெரும் பதட்டமான சூழலில், பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம், உடனடியாக போர் வரும் என்று பொருள் அல்ல. இது குடிமைப் பாதுகாப்பு விதி 1968-ன் கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கை அவ்வளவே.
பொதுமக்கள் பாதுகாப்பு ஒத்திகை என்றால் என்ன?
வான் வழி தாக்குதல், போர், ஏவுகணை தாக்குதல் உள்ளிட்ட நேரங்களில் மக்களும், அரசு நிர்வாகமும் எப்படி அதனை எதிர்கொள்கிறது என்பதை அறிவதற்காக நடத்தப்படுவது. மக்களின் பயத்தை குறைப்பது, குழப்பங்களை தவிர்ப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உயிரிழப்புகளை குறைப்பது உள்ளிட்டவற்றை அடிப்படை நோக்கமாக கொண்டதே தத்ரூபமான போர் ஒத்திகை.
இதன் மூலம், அதிகாரிகளும், பொதுமக்கள் தங்கள் பங்கு என்ன என்பதை ஆழ்ந்து அறிந்துகொள்வது. மேலும், இந்த ஒத்திகையின் மூலம், ஏதேனும் இன்னும் மேம்படுத்த வேண்டியது இருந்தால் அதனை அதிகாரிகள் கண்டறிந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
போர் ஒத்திகையின் போது மக்கள் எதிர்கொள்வது:
நாளை (7ஆம் தேதி) நடைபெறும் போர் ஒத்திகையின்போது, தற்காலிக மின் தடை, செல்போன் சிக்னல்கள் நிறுத்தம், போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவற்றை மக்கள் எதிர்கொள்ள நேரிடும். சில இடங்களில் காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் இணைந்து போர் கால அவசர சூழலை ஏற்படுத்தி மக்களை அதில் இருந்து வெளியேற்றுவது எப்படி என்பதை தத்ரூபமாக செய்வார்கள்.
போர் ஒத்திகையின்போது செய்ய வேண்டியவை:
- பதட்டம் கொள்ளாமல், உங்கள் பகுதியில் அறிவிக்கப்படும் வழிமுறைகளை பின்பற்றுவது.
- தண்ணீர், மருந்துகள் மற்றும் ஒளிரும் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை தயார் செய்துவைத்துக்கொள்ள வேண்டும்.
- மின்சாரம் அல்லது இணைய சேவை திடீரென சிறிது நேரம் தடைபட்டால் அச்சம்கொள்ளக் கூடாது.
- உறுதிப்படுத்தப்படாத அல்லது வதந்ததிகளை சமூக வலைதளங்களில் பகிராமல் இருக்க வேண்டும்.
- வானொலி அல்லது அரசு செய்தி நிறுவனங்கள் வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் உள்வாங்குவது.
- போர் பாதுகாப்பு ஒத்திகையின் போது என்ன நடக்கும்?
மே 7ஆம் தேதி நடைபெறும் போர் பாதுகாப்பு ஒத்திகையில், குடிமைப் பாதுகாப்பு வார்டன்கள், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள், நேரு யுவ கேந்திர சங்கதன் (NYKS) உறுப்பினர்கள் மற்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்று ஒத்திகை நடத்துவர். குறுகிய கால மின்வெட்டு, அதீத ஒலியில் சைரன் ஒலிப்பது, சில பொது இடங்களில் அனுமதி மறுக்கப்படுவது, சில நகரங்களில் போக்குவரத்து மாற்றம் உள்ளிட்டவை நடக்கும். இது வெறும் ஒத்திகை தான். எனவே மக்கள் அச்சம்கொள்ள வேண்டாம்.
வெளியேற்றம் மற்றும் மக்களுக்கு பயிற்சி:
இந்த ஒத்திகையின்போது அதிக பாதிப்புக்குள்ளாகும் இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு எப்படி மக்களை வெளியேற்றுவதை அதிகாரிகள் செய்துபார்ப்பார்கள். இதன் மூலம், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதனை சரி செய்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் சமூக கூடங்களில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும். இதில், மக்கள் பாதுகாப்பான இடங்களை கண்டறிவது, அடிப்படையான முதலுதவியை அறிவது, அவசர காலத்தில் பதட்டம் இல்லாமல் இருப்பது உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு மாநில அரசும், யூனியன் பிரதேச அரசும் போர் ஒத்திகை முடிந்ததும், மத்திய அரவிற்கு ரிப்போர்ட் வழங்க வேண்டும்.
