சென்னை: அரபிக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று முற்பகலில் கரையைக் கடக்கவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில், மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரிக்கு வட மேற்கே 40 கிலோ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக, நாட்டில் 4 மாநிலங்களுக்கு இன்றும் நாளையும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்பதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்துக்குள் தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இம்மாத இறுதி வரை தென்மேற்குப் பருவமழையின் முதல் சுற்று தீவிரமடைந்து காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு
அரபிக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி, பாம்பன் துறைமுகக்ஙளில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
