`அன்புமணியின் செயல் தலைவர் பதவி பறிக்கப்படலாம்…’
பாட்டாளி மக்கள் கட்சியில், மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல், ஒன்பது மாதங்களைக் கடந்து உச்சம் தொட்டுள்ள நிலையில், ராமதாஸ் அணி – அன்புமணி அணி என இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது கட்சி.
இந்த நிலையில், கடந்த 9-8-2025 அன்று அன்புமணி அணி மாமல்லபுரத்தில் நடத்திய பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில், அவருக்குத் தலைவர் பதவியை ஓராண்டு நீட்டித்திருப்பதாக அறிவித்தது. அதே வேகத்தில், `ஆகஸ்ட் 17-ம் தேதி புதுச்சேரியில் பா.ம.க-வின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்’ என்று அறிவித்திருந்தார் மருத்துவர் ராமதாஸ்.
இந்த நிலையில்தான், ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு தைலாபுரம் தோட்டத்தில் தாய் சரஸ்வதி அம்மாளின் பிறந்தநாளில், மருத்துவர் ராமதாஸ், அன்புமணி, சௌமியா அன்புமணி ஆகியோர் கேக் ஊட்டிக் கொண்டாடும் புகைப்படங்கள் வெளியானது.

அத்துடன் `அய்யாவிடம் ஆசி பெற்ற சின்ன அய்யா’ என்ற வாசகங்களை, `கண்கள் பனித்தன… இதயம் இனித்தது’ என்ற பாணியில் சமூக வலைதளங்களில் உலவவிட்டது அன்புமணி தரப்பு. உடனே சுதாரித்துக்கொண்ட ராமதாஸ், `அன்புமணி என்னிடம் ஆசியெல்லாம் பெறவில்லை.
`வணக்கம் என்றார் அவ்வளவுதான்’ என்று கூறி உருட்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்படியான சூழலில் கூடும் பொதுக்குழுவில், `அன்புமணியின் செயல் தலைவர் பதவி பறிக்கப்படலாம்’ என்று தகவல் பரவியதால், கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது.
பொதுக்குழு நடைபெற்ற புதுச்சேரியை ஒட்டியிருக்கும் பட்டானூர் சங்கமித்ரா மாநாட்டு மையத்தில், 16-ம் தேதி இரவு முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் குவிய ஆரம்பித்தனர்.
