
கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் போன்ற பல்கலைக்கழகங்களில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற மன்மோகன் சிங், ஐக்கிய நாடுகள் அவையின் வர்த்தக மேம்பாட்டுக்கான பிரிவில், 1966 முதல் 1969 வரை, புகழ்பெற்ற பொருளாதார வல்லுநரான ரவுல் ப்ரீபிஷ் (Raul Prebish) தலைமையில் பணியாற்றிய பெருமை பெற்றவர். டெல்லி பொருளாதாரப் பள்ளியில் பேராசிரியராக சேர்ந்தார்.
மத்திய அரசிற்குள் அவரின் என்ட்ரி 1971ல் நிகழ்ந்தது. 1971-ல் நிதி அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக தொடங்கி நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர், நிதி அமைச்சக செயலாளர், திட்டக்குழு துணைத் தலைவர், ரிசர்வ் வங்கி ஆளுநர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் என பல பதவிகளை வகித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நன்மதிப்பை பெற்றவர்.
எனினும், அதிகாரி ரீதியிலான பதவிகளை வகித்து வந்த மன்மோகன் சிங்கை, அரசியல் பக்கம் அதுவும் அமைச்சராக மாறியது ஒரு தொலைபேசி அழைப்பு சம்பவத்துக்கு பிறகே. அது ஜூன் 1991. மன்மோகன் சிங், நெதர்லாந்தில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு, டெல்லிக்குத் திரும்பியிருந்தார். அன்று இரவு, மன்மோகன் சிங்கின் மருமகன் விஜய் தங்கா ஒரு தொலைபேசி அழைப்பை எடுத்தார். மறுமுனையில் கேட்டது அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவின் நம்பிக்கைக்குரிய நபரான பி.சி.அலெக்சாண்டரின் குரல்.
அலெக்சாண்டர் விஜய்யை தன் மாமனார் மன்மோகன் சிங்கை தூக்கத்தில் இருந்து எழுப்பும்படி வற்புறுத்தினார். பின்னர் சில மணிநேரங்களுக்கு பிறகு மன்மோகன் சிங்கும் அலெக்சாண்டரும் சந்தித்தனர். சந்திப்பில், அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் தனது அமைச்சரவையில் நிதி அமைச்சர் பதவியை மன்மோகன் சிங்கிற்கு அளிக்க விருப்பத்தை எடுத்துரைத்தார் அலெக்சாண்டர்.
ஆனால், அப்போது யுஜிசி தலைவராக இருந்த மன்மோகன் சிங், அரசியலில் ஆர்வம் இல்லாதவர். மேலும், அலெக்சாண்டர் சொன்னதையும் மன்மோகன் சிங் நம்பவில்லை. மறுநாள், வழக்கம் போல UGC அலுவலகத்துக்கு பணிக்குச் சென்றார். இம்முறை நேரடியாக பிரதமர் பி.வி.நரசிம்ம ராவிடம் இருந்தே, மன்மோகன் சிங்கிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
போனில் பேசிய நரசிம்ம ராவ், “நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்.. அலெக்சாண்டர் எதுவும் கூறவில்லையா?” என்று மன்மோகன் சிங்கை நோக்கி கேள்விகளை எழுப்பினார். அதற்கு, “அலெக்சாண்டர் பேசினார். ஆனால் நான் அவரை நம்பவில்லை” என்று மன்மோகன் சிங் பதில் கொடுத்ததாக அவரது மகள் தமன் சிங் பின்னாளில் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்பின் நடந்த பதவியேற்பு விழாவில், மற்ற அமைச்சர்களுடன் நிதி அமைச்சராக மன்மோகன் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார்.
நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்க சில மணிநேரங்கள் மட்டுமே தனக்கு யோசிக்க நேரம் இருந்ததாக ஒருமுறை மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் பொறுப்பை ஏற்க தனது குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
“அரசியல்வாதிகள் நீங்கள் நினைத்ததை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் உங்களை பலிகடா ஆக்கலாம்” என்று குடும்பத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் அவர் பதிவு செய்துள்ளார். மேலும், அந்த நேரத்தில் லண்டனில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருந்ததையும் குறிப்பிட்டு இருக்கிறார் மன்மோகன் சிங்.
எனினும், நெருக்கடி நிறைந்த இந்தியப் பொருளாதாரத்தை வழிநடத்த வாய்ப்பை அவர் நிராகரிக்க விரும்பவில்லை. 1991 ஜூன் 21 அன்று, மன்மோகன் சிங் யுசிஜி அலுவலகத்தில் இருந்து, வீட்டிற்குச் சென்று, புதிய ஆடை அணிந்து, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளச் சென்றார். பதவிப் பிரமாணம் செய்ய அணிவகுத்து நிற்கும் புதிய அணியில் அவரை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.
எனினும், அந்த நியமனம் இந்தியாவின் பொருளாதாரத்தின் போக்கையே மாற்றியது. குறைந்த வளர்ச்சி பொருளாதாரத்தில் இருந்து இன்று உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியது.
பிரதமர் நரசிம்ம ராவுடன் சேர்ந்து சீர்திருத்தங்களை மேற்கொண்டார். தனது முதல் பதவிக்காலத்தில் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்கினார். அதேநேரம், 34 தொழில்களில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தார். பொதுத்துறை நிறுவனங்களில் தனியாரின் பங்களிப்பை அதிகப்படுத்தினார்.
அடிப்படைக் கட்டமைப்புகளுக்கான முதலீடுகளை அதிகரித்தல், வணிக முறைகளில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துதல், வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துதல், தொழில்துறை சார்ந்த கட்டுப்பாடுகளை தளர்த்துதல் என மன்மோகன்சிங்கின் அதிரடிகள் தொடர்ந்தன. இவற்றின் விளைவாக 1991ல் 127 கோடி ரூபாயாக இருந்த அந்நிய முதலீடு 1996ல் சுமார் 340 கோடி ரூபாயாக அதிகரித்தது. 1991ல் 16 விழுக்காடாக இருந்த பணவீக்கம் 1996ல் 9 விழுக்காடாகக் குறைந்தது.
நேருவின் சோஷலிசப் பாதையிலிருந்து காங்கிரஸ் விலகுவதாக எதிர்க்கட்சிகள் தீவிரமான விமர்சனத்தை முன்வைத்த போதிலும், மன்மோகன்சிங் தான் எடுத்த முடிவில் உறுதியாக நின்றார். சவால்கள் நிறைந்த சூழலில் இந்தியப் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கமாக மாற்றினார் மன்மோகன்சிங். அப்போது மன்மோகன் சிங் எடுத்த சில முக்கியமான முடிவுகள் இந்திய பொருளாதாரத்தின் போக்கையே மாற்றியமைத்தன என்பதே நிதர்சனம்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
December 27, 2024 7:22 AM IST
