ஜெய்ப்பூர்: ‛‛காங்கிரசுக்கு ஒரே ஒரு நோக்கம். வாரிசு அரசியல் தான்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: ராஜஸ்தானின் 40 லட்சம் இளைஞர்களை கெலாட் அரசு ஏமாற்றியுள்ளது. இங்கு பாஜ., ஆட்சி அமைத்தால் ஊழலில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைப்போம்.
காங்கிரஸ் கட்சியும், அசோக் கெலாட் அரசும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரானது. தேர்தல் வினாத்தாள் கசிவு நடந்த பிறகும் அசோக் கெலாட் எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறார். அசோக் கெலாட் மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்துகிறார்.
காங்கிரசுக்கு ஒரே ஒரே நோக்கம். வாரிசு அரசியல் தான். சோனியா தனது மகன் ராகுலை பிரதமராக்க விரும்புகிறார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், அட்டூழியங்கள் நடக்கின்றன. அவர்களால் ஒருபோதும் ராஜஸ்தானை வளர்க்க முடியாது. பிரதமர் மோடியால் மட்டுமே ராஜஸ்தான் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்த முடியும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

