தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் வறுமையின் கொடுமையில் சுமார் 300 வீடுகள்.
மனித உரிமையையே மல்லாக்கப் புரட்டிப்போட்ட அதிகார வர்க்கத்தின் மிகப் பெரிய அத்துமீறல் அங்கு அரன்கேறிய நாள்…. 1992-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி.
இந்தக் கிராமத்தை ஒட்டியிருக்கும் சித்தேரி மலைகளில் சந்தன மரங்கள் ஏராளமாக இருந்தன. இவற்றை அரூர் சரக வனத் துறை அதிகாரிகள் சிலரின் ஆசியோடு, மரக் கடத்தல் முதலைகள் சிலர் வெட்டிக் கடத்திக்கொண்டு இருந்தனர். அதிகக் கூலி கிடைக்கிறதே என்று கிராமவாசிகளில் சிலரும் மரம் வெட்டும் பணிக்குச் சென்றனர்.
சில தொல்லைகள் வரத் தொடங்கவே, மிரண்டுபோன மக்கள் மரம் அறுக்கும் வேலைக்குச் செல்ல மறுத்தனர்.
இந்தக் கடத்தல் நடமாட்டம் குறித்த தகவல்கள் அரசல் புரசலாக அம்பலத்துக்கு வந்துவிட…… அதிகாரிகள் பொங்கி எழுந்தனர். “சந்தனம் உட்பட விலை மதிப்பு மிக்க வனச் செல்வங்களை, வாச்சாத்தி மக்கள் பெருமளவு கொள்ளை அடிக்கிறார்கள்…” என்று பொய்யான தோற்றத்தை உருவாக்கி, ரெய்டு என்ற பெயரில் வனத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை ஆகியவை கிராமத்துக்குள் அன்றைய தினம் புகுந்தன.
அப்போது அதிகாரிகள் சிலர், ஊரில் இருந்த பருவம் அடைந்த, பருவம் அடையாத சிறுமிகள் 18 பேரை ஏரிக்குக் கடத்திச் சென்று… வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு, கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் மாபெரும் பாலியல் கொடூரத்தை அரங்கேற்றினர். அதோடு, வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 90 பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள் உள்பட மொத்தம் 133 பேரைக் கைது செய்து சிறைக்கும் அனுப்பினர்.
இந்த விஷயம், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் மூலம் வெளிச்சத்துக்கு வர… தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது.
இந்தப் புகார் தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலை 1992ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி அரூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால், அந்தப் புகார்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாச்சாத்தி கிராமத்தில் கூட்டுக்குழுவினர் சோதனையின்போது நடந்தது என்ன? என்பது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தவும், விசாரணைக்குப் பிறகு நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென்மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான குழுவினர், வாச்சாத்தி கிராமத்தில் நேரில் விசாரணை நடத்தினர். இந்தக் குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில்தான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இப்படிப் பல்வேறு சட்டப் போராட்டங் களுக்குப் பிறகே வழக்குப் பதிவு செய்யப் பட்டு, பிறகு சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவு இடப்பட்டது. 269 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு, இந்த வழக்கை தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. நடத்தி வந்தது. 19 ஆண்டுகளாக இழுபறியாக இருந்த இந்த வழக்கின் விசாரணை…. முக்கித் தக்கி முடிவுக்கு வந்திருக்கிறது.
வன்கொடுமை, அத்தியாவசிய உணவு ஆதாரங்களை அழித்தல், வன்புணர்ச்சி ஆகிய குற்றங்கள் நடந்ததற்கான வலுவான ஆதாரங்களோடு வழக்கை சி.பி.ஐ. நடத்தியது.இதனிடையே, குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஏழு அரசு அதிகாரிகள், “சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் பணியாற்றிய தர்மபுரி கலெக்டர் தசரதன், எஸ்.பி-யான ராமானுஜம், ஆர்.டி.ஓ-வான தெய்வ சிகாமணி ஆகிய மூவரையும் வழக்கில் சேர்க்க வேண்டும். மீண்டும் ஒரு முறை அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையோடு ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர்.
அது சில மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது.உடனே அவர்கள், சென்னை உயர் நீதிமன்றத் துக்குப் போனார்கள். கடந்த வாரத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி பாஷா, ‘சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்த்த ஒரே காரணத்துக்காக, குறிப்பிட்ட அந்த அதிகாரிகளை வழக்கில் சேர்க்கக் கோருவது வினோதம். வழக்கை மேலும் தாமதப்படுத்த இதுபோன்ற குறுக்கு வழிகளைக் கையாள்வது கண்டிப்புக்கு உரியது. இந்தக் குற்றத்துக்காக மனுச் செய்த ஏழு பேரும் சென்னையில் உள்ள குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு, தலா 10,000 அபராதமாகக் கட்டவும்’ என்று ‘ஷாக்’ கொடுத்ததோடு வழக்கு விசாரணையைத் துரிதமாக்கும்படியும் தர்மபுரி நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதன்படி வாச்சாத்தி வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 5ஆம் தேதி முதல் தொடங்கி நடந்துவந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு முன்பு சி.பி.ஐ. தரப்பு மற்றும் குற்றம்சாற்றப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகித் தங்களது தரப்பு வாதங்களை எடுத்துரைத்து வாதாடினார்கள்.
அதன்பின் இருதரப்பினரின் பதில் வாதமும் நடந்து முடிந்து, வழக்கு முடிவை எட்டியிருக்கிறது.
வாச்சாத்தி வழக்கில் குற்றம்சாற்றப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்களின் பட்டியலில் 1ம் எண் முதல் 155 எண் வரை உள்ளவர்கள் வனத்துறையைச் சேர்ந்தவர்கள். 156வது எண் முதல் 263 எண் வரை உள்ளவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். 264வது எண் முதல் 269வது எண் வரை உள்ளவர்கள் வருவாய்துறையைச் சேர்ந்தவர்கள். மொத்தம் உள்ள 269 பேரில் 53 பேர் வழக்கு நடக்கும்போதே இறந்து விட்டனர்.
மீதமுள்ள 216 பேர் இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகி வந்தார்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது. கடந்த 2004ல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட போது இந்தியா முழுவதிலும் இருந்து தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி சேனல்களும் நேரடி ஒளிபரப்பு செய்ய தர்மபுரி மாவட்டமான பாப்பாரப்பட்டிக்கு படை எடுத்தன.
அந்த சம்பவத்துக்கு பிறகு தீர்ப்பை கேட்கவும், ஒளிபரப்பு செய்யவும் பிரபல ஆங்கில சேனல்கள் உள்பட தமிழ் சேனல்களும் ஒளிபரப்பு வாகனங்களுடன் தர்மபுரி கோர்ட் வளாகம் முன்பு காத்திருந்தன. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.ஒட்டுமொத்த கிராமத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய வழக்கில், தீர்ப்பை கேட்பதற்காக வாச்சாத்தி மலை கிராம மக்கள் 3 பஸ்களில் கோர்ட்டுக்கு புறப்பட்டனர்.
இதில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களும், தாக்குதலுக்கு ஆளான ஆண்களும் அடங்குவர். பஸ்சில் ஏறுவதற்கு முன்னதாக பெண்கள், மலை கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் கண்ணீர் மல்க சாமி கும்பிட்டுவிட்டுப் புறப்பட்டனர்.19 வருடங்களாக வலியோடு, வேதனையோடு, வாழ்க்கையையே தொலைத்துவிட்டுத் தவித்துக் கொண்டிருக்கிற 18 பெண்களும், இந்தத் தீர்ப்பைப் பார்த்து சந்தோஷப் படுவார்களா என்பதை நீங்களே புரிந்துகொள்ளலாம்.
அதிகாரி வீட்டுக் கோழிமுட்டைகூட குடியானவன் வீட்டு அம்மிக்கல்லை உடைக்கும் சக்தி படைத்தது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.
Credits @senthilthanavel

