உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலியிலும், கேரளாவில் வயநாட்டிலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, இரு தொகுதிகளிலுமே வெற்றிக்கனியைப் பறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரேபரேலியைத் தக்கவைத்துக்கொண்டு, வயநாடு தொகுதியை ராஜினாமா செய்கிறார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, இரண்டு தொகுதிகளிலிருந்து மக்களவைக்குத் தேர்வானவர், ஏதாவது ஒரு தொகுதியில் மட்டுமே எம்.பி-யாக நீடிக்க முடியும்.
எனவே, ரேபரேலி தொகுதியின் எம்.பி-யாக இருந்து செயல்படுவது என்று ராகுல் காந்தி தீர்மானித்திருக்கிறார். அதனால் காலியாகும் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி போட்டியிடவிருக்கிறார். இது தொடர்பான செய்திகள் வெளியானவுடன், ‘வாரிசு அரசியல்’ என்று பா.ஜ.க தரப்பிலிருந்து விமர்சனங்கள் கிளம்பினாலும், இந்த செய்தியால் காங்கிரஸ் கட்சியினர் பெரிதும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
ராகுல் காந்தியைப் போலவே, பிரியங்கா காந்தியும் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கைகளில் ஒருவராக இருக்கிறார். நீண்டகாலம் மக்களவை எம்.பி-யாக இருந்துவந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இந்த முறை மாநிலங்களவைக்கு சென்றுவிட்டார். அதனால், சோனியா காந்தி பல முறை வெற்றிபெற்ற காங்கிரஸின் பாரம்பர்யமிக்க ரேபரேலி மக்களவைத் தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று செய்திகள் பரபரத்தன. ஆனால், ராகுல் காந்தியே அங்கு போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார்.

வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதால், அங்கு பிரியங்கா காந்தி களமிறங்குகிறார். இந்த நிலையில், ‘வயநாடு தொகுதியைப் பிரதிநிதித்துவப் படுத்துவதில் மகிழ்ச்சியடைவேன். வயநாடுக்கு தொடர்ச்சியாக வருவேன் என்று ராகுல் கூறியிருக்கிறார். அனைவரும் மகிழச்சியாக இருப்பதற்கு கடுமையாக உழைப்பேன்’ என்று பிரியங்கா காந்தி கூறியிருக்கிறார்.
தான் ஓர் ஆற்றல் மிகுந்த அரசியல் தலைவர் என்பதை 2024 மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி நிரூபித்திருக்கிறார் என்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் உத்தரப்பிரதேசத்தை மட்டுமே கவனித்துக்கொண்ட அவர், இந்த முறை நாடு முழுவதும் பிரசாரம் செய்தார். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களின் விமர்சனங்களுக்கு உரிய பதிலடி கொடுப்பவராகவும் பிரியங்கா காந்தி இருந்தார்.

குடும்ப அரசியல், வாரிசு அரசியல் என்று சோனியா காந்தி குடும்பத்தைக் குறிவைத்து பிரதமர் மோடி விமர்சித்தபோது, பிரியங்கா காந்தியே மோடிக்கு பதிலடி கொடுத்தார். ‘எங்கள் பாட்டியும், எங்கள் தந்தையும் இந்த நாட்டுக்காக உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள். அதை முன்னிறுத்தி எப்போதாவது நாங்கள் வாக்கு கேட்டிருக்கிறோமா?’ என்று ஆவேசப்பட்டார் பிரியங்கா காந்தி. அதற்கு மோடியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இப்படியாக, மக்களவைத் தேர்தலில் மேற்கொண்ட தீவிரப் பிரசாரத்தாலும், அவர் முன்வைத்த கருத்துகளாலும், பதில்களாலும், பிரியங்கா காந்தியின் இமேஜ் உயர்ந்தது.
இதற்கு முன்பு, கர்நாடகா சட்டமன்றத் தேர்தலின்போது, ‘விஷப்பாம்பு போன்றவர்’ என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துவிட்டார். அதற்கு, ‘காங்கிரஸ்காரர்கள் என்னை 91 முறை அவமதித்துவிட்டார்கள்’ என்று பிரதமர் மோடி கதறினார். அப்போது, பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்தவரும் பிரியங்கா காந்திதான்.

‘பல பிரதமர்களை பார்த்திருக்கிறேன். ஆனால், என்னை அவமதிக்கிறார்கள் என்று மக்கள் முன்பு நின்று அழக்கூடிய ஒரு பிரதமரை இப்போதுதான் பார்க்கிறேன். மக்களின் பிரச்னைகளைப் பட்டியல் போடாமல், தன்னுடைய பிரச்னைகளை அவர் பட்டியலிடுகிறார்’ என்று பிரியங்கா காந்தி சாடினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு, கிழக்கு உத்தரப்பிரதேசத்துக்கு பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். அப்போது, ‘இந்திரா மீண்டும் வருகிறார்’ என்று உத்தரப் பிரதேத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் சுவரொட்டி ஒட்டினார்கள். ‘இந்திரா காந்தியைப் போன்ற வசீகரமான தலைவராக பிரியங்கா காந்தி ஜொலிப்பார்’ என்ற பேச்சு காங்கிரஸ்காரர்கள் மத்தியில் நிலவியது.
வட இந்தியாவில் காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிரியங்கா காந்தி, தற்போது களமிறங்கப்போவது என்னவோ, தென் இந்தியாவில் இருக்கும் கேரளாவில். இந்த முடிவை காங்கிரஸ் கட்சியின் வியூகமாகவும் பார்க்கலாம். தென் இந்தியாவில் பா.ஜ.க பலவீனமாக இருக்கும் நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற முக்கியத் தலைவர்கள் தென் இந்தியாவிலிருந்து எம்.பி-யாகப் பிரதிநிதித்துவப்படுத்துவது காங்கிரஸ் கட்சிக்கு பலம் என்று அதன் நிர்வாகிகள் நினைக்கிறார்கள். இது சரியான முடிவு என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

இந்த முறை வயநாட்டில் 6,47,445 வாக்குகள் பெற்று மிகப்பெரிய வெற்றியை ராகுல் காந்தி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனி ராஜா 2,83,023 வாக்குகளே பெற்றார். ஆகவே, ராகுல் காந்தி அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை வயநாட்டில் பிரியங்கா காந்தி பெறுவாரா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88
