மாநகராட்சி எல்லைப்பகுதிக்குள் உள்ள கால்வாய் வழியாக வைகையாற்றுக்கும் வைகையாற்றிலிருந்து கால்வாய் வழியாக கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்ல 11 வாய்க்கால்கள் நீர்வளத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்தது.
மாநகராட்சி மூலம் தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் இக்கால்வாய்களை மழைநீர் செல்லும் வடிகாலாக பயன்படுத்த திட்டமிடப்பட்டது.
இதற்காக நீர்வளத்துறையிடம் இருந்து பராமரிப்பு என்ற பெயரில் கால்வாய்கள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. 2008 – 09 ல் 11 மண் கால்வாய்களும் 60 கி.மீ., நீளத்திற்கு சிமென்ட் கால்வாயாக மாற்றப்பட்டது.
திசைமாறிய கால்வாய்கள்
வைகையாற்றின் கிடைமட்ட அளவு, அங்கிருந்து கண்மாய்க்கு செல்லும் கால்வாயின் நீள, அகலம், ஏற்ற இறக்கம் அனைத்தையும் அளவிடாமல் பெயருக்கு சிமென்ட் கால்வாயாக மாற்றப்பட்டது.
இதனால் ஆற்றிலிருந்து கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல வேண்டிய கால்வாய்கள் தலைகீழாகவும் மழைநீர் வடிகாலுக்கு பதிலாக கழிவுநீர் வடிகாலாகவும் மாற்றப்பட்டது. பெரும்பாலான கால்வாயில் குப்பையும் கொட்டப்பட்டதால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. பனையூர், சிந்தாமணி, கிருதுமால் வாய்க்கால்களில் தண்ணீரோடு கழிவுநீரும் சேர்ந்து செல்கிறது. செல்லுார் கண்மாயில் உபரிநீர் பெருகும் போது மட்டுமே பந்தல்குடி கால்வாயில் தண்ணீர் செல்லும்.
மற்ற நேரங்களில் கழிவுநீர் மட்டுமே செல்கிறது. மேலமடை உபரிநீர் வாய்க்காலாக கழிவுநீர் சேர்ந்து செல்கிறது.
கோசாகுளம், சொட்டதட்டி கால்வாயின் நிலை தெரியவில்லை. அனுப்பானடி, அவனியாபுரம், வண்டியூர் கால்வாயில் கழிவுநீர் மட்டுமே செல்கிறது.
கண்மாய்களின் உபரிநீரை பெறும் வகையில் கோசாகுளம், பந்தல்குடி, சொக்கிகுளம், மேலமடை கால்வாய்கள் வைகையாற்றில் கலக்கிறது. கிருதுமால் கால்வாய் மட்டுமே 12 கி.மீ. நீளத்திற்கு சாக்கடை கால்வாயாக மாறியுள்ளது.
மதுரையைத் தாண்டினால் ராமநாதபுரம் அபிராமம் வரை 80 கி.மீ., நீளத்திற்கு கிருதுமால் பயணிக்கிறது.
மழைநீர் வடிகாலாக பயன்படுத்துவதற்காக தான் இந்த கால்வாயை சிமென்ட் பாதையாக மாற்றினர். நோக்கமே நிறைவேறாததால் கால்வாய்களின் வழியாக கழிவுநீர் வைகையாற்றுக்குள் செல்கிறது.
துாத்துக்குடி, திருநெல்வேலியைப் போன்று பெருமழை பெய்தால் ஒட்டுமொத்த மாநகராட்சி கழிவுநீரும் அனைத்து வீடுகளுக்குள்ளும் தஞ்சமடைந்து விடும். எங்களிடம் மீண்டும் கால்வாயை ஒப்படைத்து பராமரிக்க நிதி ஒதுக்கினால் கால்வாய் பாதையை சீரமைக்க முடியும். அல்லது மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து திட்டமிட்டால் தான் கால்வாய்களால் மதுரைக்கு பயன் கிடைக்கும் என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

