Last Updated:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஓய்வு பெறுவதால், வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்குகள் புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மே 15க்கு விசாரிக்க உத்தரவு.
மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. திமுக, முஸ்லிம் லீக், தவெக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பாக 70க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவருகிறது. அதன்படி, இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “வக்ஃப் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் மனுதாரர்கள் பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ளன. மேலும், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். நான் ஓய்வு பெற இருப்பதால், மனுதாரர்கள் அனைவருக்கும் ஒப்புக்கொண்டால் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி கவாய் அமர்வு இந்த வழக்கை விசாரிக்க பட்டியலிடுகிறோம்” எனத் தெரிவித்தார்.
இதனை ஏற்ற மனுதாரர்களின் வழக்கறிஞர்களான கபில் சிபல், ஏ.எம். சிங்வி உள்ளிட்டவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனால், வழக்கு விசாரணையை வரும் மே 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார். அதேபோல், இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட வக்ஃப் திருத்த சட்டத்தின் கீழ் எந்த ஒரு நடவடிக்கையும் நியமனங்களும் நடைபெறக் கூடாது எனும் இடைக்கால உத்தரவையும் நீட்டிப்பதாக உத்தரவிட்டார்.
தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, வரும் 13ஆம் தேதியோடு ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் மே 14ஆம் தேதி பொறுப்பேற்கிறார். இதனைத் தொடர்ந்து வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மே 15ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

