வக்ஃபு வாரிய சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 12 மணி நேர காரசார விவாதத்திற்குப் பிறகு நள்ளிரவு 2 மணியளவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
நள்ளிரவு 2.45 மணியளவில் 128 உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. மசோதாவிற்கு எதிராக 95 பேர் வாக்களித்தனர். இதன்மூலம் மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேறியது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இனி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட உள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குப் பிறகு மசோதா சட்ட வடிவம் பெற உள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக மற்றும் அதிமுக எம்.பி.க்கள் வாக்களித்தனர்.
அதாவது, திமுகவை சேர்ந்த 10 மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமுகவை சேர்ந்த 4 பேரும் வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளனர்.
அதே போன்று, மதிமுக எம்.பி., வைகோ, காங்கிரஸ் எம்.பி., சிதம்பரம் ஆகியோரும் வக்ஃப் வாரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
அதேநேரம் பாமக தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி, வாக்கெடுப்பை புறக்கணித்தார்.
தமிழ்நாட்டில் இருந்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மட்டும், வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
April 04, 2025 9:18 AM IST
Waqf Amendment Bill | பங்கேற்காத அன்புமணி… ஆதரவளித்த ஜி.கே.வாசன்… வக்ஃப் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது எப்படி?
