கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பழைய வழித்தடத்தில் மீண்டும் தொடங்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், திருவாரூர் – காரைக்குடி இடையே ரயில் பாதை மாற்றும் பணிக்காக சென்னை எழும்பூர்-காரைக்குடி-சென்னை எழும்பூர் கம்பன் எக்ஸ்பிரஸ் என்ற இரவு நேர ரயில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
காரைக்குடியிலிருந்து சென்னைக்கு இந்த நேரடி ரயில் சேவை இல்லாததால், பயணிகள் தஞ்சாவூர் அல்லது மன்னார்குடியில் இருந்து சென்னை செல்லும் ரயில்களில் ஏற வேண்டியிருந்தது.
கேஜ் மாற்றும் பணி முடிந்து, திருவாரூர்-காரைக்குடி வழியாக பயணிகள் ரயில் சேவை தொடங்கும் நிலையில், கம்பன் எக்ஸ்பிரஸ் அசல் வழித்தடத்தில் புத்துயிர் பெறுவது தினசரி பயணிகள் மற்றும் வணிகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும், என்றார்.

