முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் மணிப்பூரில், பெரும்பான்மையினராக இருக்கும் மைதேயி இனத்தவர் தங்களுக்குப் பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்திவருகிறார்கள். கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், அரசியல் அதிகாரத்திலும் வலிமையுடன் இருக்கும் மைதேதி இனத்தவருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கிவிட்டால், தாங்கள் பாதிக்கப்படுவோம் என்ற அச்சம் குக்கி உள்ளிட்ட பழங்குடியினருக்கு இருக்கிறது. எனவே, மைதேயி இனத்தவரின் கோரிக்கைக்குப் பழங்குடி சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தையொட்டி, இரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டு, அது பெரும் வன்முறையாக வெடித்தது. வீடுகள், வழிபாட்டுத்தலங்கள், வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இரு தரப்பினரிடையிலான மோதல்களில் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். வன்முறை கட்டுக்கடங்காத நிலையில், ராணுவம் வரவழைக்கப்பட்டது. அதன் பிறகு, கலவரம் கட்டுப்படுத்தப்பட்டாலும், வன்முறை சம்பவங்கள் தொடர்கின்றன. சமவெளியிலும், மலைப்பகுதிகளிலும் வன்முறையால் ஏராளமான வீடுகள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. வீடு வாசல்களை இழந்த சுமார் 37,000 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றன.

