புல்தானா மாவட்டத்தின் குறிப்பிட்ட நான்கு கிராமங்களைச் சேர்ந்த 29 பேர் தங்களது நகங்களில் வெடிப்பு ஏற்பட்டு பின்னர் அவை உதிர்ந்து வருவதாக கூறியுள்ளனர். மேலும் இந்த விவரிக்கப்படாத பிரச்சினை அப்பகுதி மக்கள் மற்றும் மருத்துவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த டிசம்பர் 2024 முதல் ஜனவரி 2025 வரை, புல்தானாவில் உள்ள ஷேகான் தாலுகாவைச் சேர்ந்த 18 கிராமங்களைச் சேர்ந்த மொத்தம் 279 குடியிருப்பு வாசிகளுக்கு திடீரென, விவரிக்க முடியாத முடி உதிர்தல் ஏற்பட்டதாகப் புகாரளிக்கப்பட்டது. பின்னர், இந்த நிலை கடுமையான மற்றும் ஆரம்பகால அலோபீசியா டோட்டலிஸ் என பின்பு அடையாளம் காணப்பட்டது.
இந்த திடீரென முடி உதிர்வு பிரச்சனை குறித்த தகவல் தீயாய் பரவிய நிலையில், தலைப்புச் செய்திகளிலும் இடம்பிடித்தது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், உள்ளூர்வாசிகள் உட்கொள்ளும் கோதுமையில் காணப்பட்ட நச்சுப் பொருட்கள் தான் இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்றும் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு அப்பகுதி மக்கள் மற்றொரு புதிய பிரச்சனையால் இப்போது பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, அந்த பகுதியைச் சேர்ந்த கிராமவாசிகள், தங்களது நகங்கள் தற்போது சேதமடைந்து வருவதாக கூறுகின்றனர். சிலர் தங்கள் நகங்களில் வெடிப்பு ஏற்பட்டு இறுதியாக அவை உதிர்ந்து வருவதாகக் கூறுகின்றனர்.
“ஷேகான் தாலுகாவின் நான்கு கிராமங்களில் இருபத்து ஒன்பது பேருக்கு நக சிதைவு அறிகுறிகள் தென்பட்டுள்ளன. சிலருக்கு, நகங்கள் முற்றிலுமாக உதிர்ந்து போயுள்ளன. மேலும், அவர்களுக்கு முதன்மை சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது மற்றும் அங்குள்ள மக்கள் மதிப்பீட்டிற்காக ஷேகானில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது” என்று புல்தானா சுகாதார அதிகாரி டாக்டர் அனில் பங்கர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
கிராமத் தலைவர் (சர்பஞ்ச்) ராம் தர்கரின் கூற்றுப்படி, இந்தப் பிரச்சினை கடந்த சில நாட்களாக இருந்து வருகிறது. “முதல் இரண்டு நாட்களில், நகங்கள் வெடிக்கத் தொடங்குகின்றன, பின்னர் அவை உதிர்ந்துவிடுகின்றன. எனவே, மாவட்ட அதிகாரி, மாவட்ட சுகாதார அதிகாரி மற்றும் சுகாதார அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் ஆகியோருக்கு நாங்கள் தகவல் தெரிவித்துள்ளோம்” என்று அவர் கூறினார். மேலும், சுகாதார அதிகாரிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
மாவட்ட மனநல அதிகாரியும், மருத்துவருமான பிரசாந்த் டாங்டே கூறுகையில், 30க்கும் மேற்பட்டவர்களின் நகங்கள் சேதமடைந்துள்ளதாகப் புகார் அளித்துள்ளதாகவும், அவர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், மண், நீர் மற்றும் சில உணவுகளில் காணப்படும் செலினியம் என்ற கனிமத்தின் அளவு அதிகரித்திருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். முன்பு முடி உதிர்தலை எதிர்கொண்ட அதே நபர்கள் தற்போது நகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
April 26, 2025 1:23 PM IST
