‘சமூகவலைதள அட்டாக்’
அதேவேளையில், சமூகவலைதளங்களில் சிலர் பிரதமரை அவமதிக்கும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டதால் விகடன் தளத்தை முடக்கிவிட்டோம் என பதிவிட்டு கொண்டிருந்தனர். ‘பாரத பிரதமர் உலகத் தலைவர் நரேந்திர மோடி அவர்களை அவதூறாக சித்தரித்த விகடன் டிஜிட்டல் சைட் முடக்கப்பட்டது. நீதி வெல்ல வேண்டும் நியாயம் கிடைக்க வேண்டும்.’ என கமலாலயத்தில் பொங்கியிருந்த பா.ஜ.க துணைத்தலைவர் கரு.நாகராஜன் பதிவை வெளியிட்டிருந்தார்.
இவற்றையெல்லாம் வைத்து செய்தி சேனல்களும் பிரதமரை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்டதால் மத்திய அரசால் விகடன் தளம் முடக்கப்பட்டதாக பிரேக்கிங் நியூஸ் அடித்தனர். ஆனால், மத்திய அரசுதான் விகடன் தளத்தை முடக்கியது என்பதற்கான எந்த செய்தியும் அரசு தரப்பிலிருந்து விகடனுக்கு கிடைக்கவில்லை.
ஆசிரியரின் விளக்கம்!
விகடன் ஊழியர்கள், வாசகர்கள் உட்பட பலரும் குழப்பத்திலிருந்த சமயத்தில்தான் விகடனின் ஆசிரியரிடமிருந்து நடப்புச் சூழலைப் பற்றி ஒரு விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. `கருத்து சுதந்திரத்திற்காக களத்தில் நிற்போம்”
விகடன் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. பல இடங்களில் பலருக்கு விகடன் தளம் வேலை செய்யவில்லை. எனினும் மத்திய அரசிடம் இருந்து இதுவரையிலும் விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக எந்த முறையான அறிவிப்பும் வரவில்லை.
முன்னதாக விகடன் இணைய இதழான `விகடன் ப்ளஸ்’ இதழில் (பிப்ரவரி 10) அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டதையும் பிரதமர் மோடி அது குறித்து பேசாமல் இருந்ததையும் குறிக்கும் விதமாக ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட்டு இருந்தது. இது பாஜக ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டதோடு, பாஜக மாநில தலைவரான அண்ணாமலையால் விகடன் நிறுவனத்துக்கு எதிராக மத்திய அரசிடம் புகாராகவும் அனுப்பபட்டது.
நூற்றாண்டு காலமாக விகடன் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எப்போதும் கருத்து சுதந்திரத்தை முன்வைத்தே இயங்குகிறோம், இயங்குவோம்.. ஒரு வேளை இந்த அட்டைப்படம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால், அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.’ என மிகத்தெளிவாக ஆசிரியர் தரப்பிலிருந்து அறிக்கை வெளியானது.
