“அதிமுகவின் மீது நம்பிக்கை இழந்துவிட்டீர்களா?”
“தொடக்கம், வளர்ச்சி, உச்சநிலை, வீழ்ச்சி தனிமனிதராக இருந்தாலும் அமைப்பாக இருந்தாலும் சரி அதை இந்த நான்கு கட்டங்களுக்குள் அடக்கிவிட முடியும். அதிமுக உச்சபட்ச வெற்றிகளை பார்த்துவிட்டது. அந்த இயக்கத்தை அதே நிலையில் தக்கவைக்க தன்னலமற்று உழைக்கும் தலைவர்களை கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை. அதிமுக மொத்தமாக கோமாளிக் கூடாரத்திடம் சிக்கியிருக்கிறது. கட்சியில் புதிதாக இணைய ஆள் இல்லை. விலகிச்செல்லும் ஆட்களிடம் பேச மனமில்லை. ‘போன மாட்டையும் தேடமாட்டான். வந்த மாட்டையும் கட்டமாட்டன்.’ என்கிற அவல நிலைக்கு அதிமுக சென்றுவிட்டது.
புரட்சித்தலைவர் வகுத்த விதிகளை தங்களுக்கென சுயநலமாக மாற்றுகிறார்கள். புரட்சித்தலைவிக்குதான் நிரந்தர பொதுச்செயலாளர் இருக்கை எனக் கூறிவிட்டு அந்த இருக்கையை அபகரிக்கிறார்கள். அதிமுகவில் நேர்மைக்கு இடமே இல்லை. தொண்டர்கள் அலுத்துவிட்டார்கள். இரட்டை இலையை தவிர வேறு சின்னங்களை தேடாத மக்கள் இப்போது வேறு வேறு கட்சிகளுக்கு மாறிவிட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 13 இடங்களில் மூன்றாம் இடத்துக்கு போய்விட்டது. இந்த நிலையிலிருந்து கட்சியை மீட்டெடுக்கும் வல்லமையோ சக்தியோ எடப்பாடிக்கு இல்லவே இல்லை.”

“அதனால்தானே ஓ.பி.எஸ் பக்கம் சென்றீர்கள். அவர் முகாமிம் நிலைமை எப்படியிருக்கிறது?”
“மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் யை அவர்கள் நடத்தியவிதம் எனக்கு பிடிக்கவில்லை. தண்ணீர் பாட்டிலை வீசி எறிந்து அவரை கட்சியிலிருந்து வெளியேற்றினார்கள். எடப்பாடியை எதிர்ப்பதற்கான கேடயமாகத்தான் ஓ.பி.எஸ் யை பார்த்தேன். ஆனால், ஓ.பி.எஸ் சமகால அரசியலில் போரிடும் தகுதியோடு இல்லை. எதிரியை பதற்றத்தோடே வைத்திருக்க வேண்டும். அதையெல்லாம் அவர் செய்யவே இல்லை. திருச்சியில் ஒரு மாநாடை நடத்தினார். அத்தோடு மந்தமாகிவிட்டார். பா.ஜ.கவின் பேச்சை கேட்டு இராமநாதபுரத்தில் சென்று போட்டியிட்டார். அதிலெல்லாம் எங்களுக்கு உடன்பாடே இல்லை. தேனியில் வலுவாக இருக்கக்கூடியவரை அங்கே போட்டியிட விடாமல் ‘Social Engineering’ என எதையோ சொல்லி இராமநாதபுரத்துக்கு அழைத்துச் சென்றார்கள். தொண்டர்களின் உரிமையை மீட்க வந்தவர், ஒரு தொண்டனை கூட அங்கே நிறுத்தியிருக்கலாம். பா.ஜ.க சொன்னதை ஓ.பி.எஸ் தலைவணங்கி ஏற்றுக்கொண்டதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. அவரின் அரசியல் மீதும் பெருத்த வருத்தம்தான். அதனால் இப்போது ஒதுங்கியே நிற்கிறேன்.”
