ஸ்டாலினும் உதயநிதியும் பிரதமரை சந்திக்கிறார்கள். அப்போதாவது தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிதியை கேட்டு வாங்கி வந்தார்களா என்றால் இல்லை. மாறாக, 2026 க்குப் பிறகு உங்களுக்கே ஆதரவு தந்துவிடுகிறோம் என எழுதப்படாத ஒப்பந்தத்தை செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலம் ஆரம்பித்ததிலிருந்து 10 மாதங்களாக அமைதியாக இருந்தது யார்? போராடிய 5000 பேர் மீது வழக்குத் தொடுத்தது யார்? அத்தனையையும் செய்துவிட்டு பாராட்டு விழாவில் கலந்துகொள்ள ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? பா.ஜ.கவுடன் 2026 -ம் கூட்டணி இல்லை. எப்போதும் கூட்டணி இல்லை என்பதுதான் எங்களின் அரசியல் நிலைப்பாடு.’ என்றார்

விஜய் எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளை பயன்படுத்துவது பற்றியும், விஜய்யுடன் அதிமுக கூட்டணிக்கு செல்லுமா என்பது பற்றியும் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘எம்.ஜி.ஆர் தவிர்க்க முடியாத சக்தி. கருணாநிதியை பற்றி யாராவது பேசுகிறார்களா? இன்றைக்கும் பட்டித்தொட்டியெங்கும் எம்.ஜி.ஆரின் பாடல்களும் தத்துவங்களும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. விஜய் ஒன்றும் எங்களுக்கு எதிரி அல்ல.’ என்றார்.
