வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் லுலு வணிக வளாகம் திறப்பு விழாவில் அதன் உரிமையாளர் யூசுப் அலி, கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி இளைஞருக்கு வேலை வழங்கினார். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. இதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலி லுலு வணிக வளாகங்களை உலகின் பல நாடுகளில் நடத்தி வருகிறார். இந்தியாவிலும் லுலு வணிக வளாக கிளைகளை திறந்து வருகிறார். அந்த வகையில், கடந்த 18 ம் தேதி கேரள மாநிலம் பாலக்காட்டில் வணிக வளாக திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் யூசுப் அலி கலந்து கொண்டார்.
அப்போது, இரண்டு கைகள் இல்லாமல் பிறந்த பிரணவ் என்ற இளைஞர், யூசுப் அலியை சந்தித்தார். லுலு உரிமையாளரை ஓவியமாக வரைந்து அதனை எடுத்து வந்து யூசுப் அலியிடம் பிரணவ் வழங்கினார். இதனை பார்த்து யூசுப் அலி நெகிழ்ந்து போனார். தொடர்ந்து அந்த இளைஞரின் ஆசைப்படி அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். பிரணவ் கால் விரல்களால் மொபைல்போனை பிடித்து செல்பி எடுத்தார். அதனை பார்த்து ஆச்சரியம் அடைந்த யூசுப் அலி, ‛‛ மொபைல் போனையும் இயக்கமுடியுமா” எனக் கேட்டு, இளைஞரின் தலையில் முத்தம் கொடுத்தார்.
பிறகு, பிரணவ் தயக்கத்துடன் ‛‛ வணிக வளாகத்தில் தனக்கு ஏதாவது வேலை வழங்க முடியுமா ” என கேட்டார். இதற்கு யூசுப் அலி,‛‛ என்ன வேலை செய்ய முடியும் ” என கேள்வி எழுப்பினார். அதற்கு பிரணவ், ‛‛ எந்த வேலை கொடுத்தாலும் அதனை சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது ” என்றார்.
இதனையடுத்து, அங்கிருந்த வணிக வளாகத்தின் மூத்த நிர்வாகியை அழைத்த யூசுப் அலி, உடடனடியாக பிரணவுக்கு வேலை வழங்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், அடுத்த முறை இங்கு வரும் போது, இந்த இளைஞர் நம்முடன் இணைந்து வேலைபார்ப்பதை நான் பார்க்க வேண்டும் ” என்றார். இதனை கேட்ட பிரணவ், கண்ணீருடன் யூசுப் அலிக்கு நன்றி தெரிவித்தார்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் யூசுப் அலியை பாராட்டி வருகின்றனர்.
ஜாதி, மதம் அப்பாற்பட்டு யூசுப் அலியின் செயல் உள்ளதாக பாராட்டும் சமூக வலைதளவாசிகள், இந்த செயல் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கும் எனவும், நேர்மறையான எண்ணங்களை வளர்க்கும் எனவும் புகழ்கின்றனர்.
அரசியல் மற்றும் பரபரப்புக்காக பகிரப்படும் வீடியாக்களுக்கு சமமாக, இந்த வீடியோவும் பகிரப்பட்டு வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

