வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஸ்லீப்பர் வேரியன்ட்டானது, தற்போது இயங்கிவரும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்களைப் போலவே 16 கோச்களை கொண்டிருக்குமா என ரயில் பயணிகள் மத்தியில் ஆர்வம் உள்ளது. இதனிடையே ரயில்வே அமைச்சகத்தின் தகவல் மற்றும் விளம்பர நிர்வாக இயக்குநர் திலீப் குமார் பேசுகையில், நாட்டின் முதல் ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில் சென்னையில் உள்ள ICF தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது என்றும், இது உண்மையில் 16 கோச்களை கொண்டிருக்கும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய திலீப் குமார் ராஜதானி எக்ஸ்பிரஸைப் போலவே, ஸ்லீப்பர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி 1, ஏசி 2 மற்றும் ஏசி 3 கிளாஸ்கள் இருக்கும் என்றும், 1,128 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில், எதிர்கால பயண தேவைகளுக்கு ஏற்ப அதன் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளலாம் என்றும் கூறினார்.
நீண்ட தூரம் இயக்க வேண்டியிருப்பதன் அடிப்படையில், இரண்டு ரயில் செட்கள் ஒரே நேரத்தில் தேவைப்படும். இதில் ஒரு ரயில் ஏற்கனவே டெல்லியில் உள்ள ஷகுர்பஸ்தியில் நிறுத்தப்பட்டுள்ளது, இரண்டாவது ரயிலின் பணிகள் சென்னை ஐசிஎஃப்-ல் நிறைவடையும் தருவாயில் உள்ளது என கூறினார்.
வந்தே பாரத் ரயில் சீரிஸில் புதிதாக சேர்க்கப்படவுள்ள இந்த ஸ்லீப்பர் ரயில்களில், முதல் ஏசி, இரண்டு அடுக்கு மற்றும் மூன்று அடுக்கு ஸ்லீப்பர் பெர்த்களுடன் கூடிய, ஸ்லீப்பர் பெர்த்கள் இருக்கும். இவை இந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இது விமான பயணத்தைப் போன்ற இரவு பயண வசதியை உறுதி செய்யும்.
விரைவில் அறிமுகமாக உள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களில் மென்மையான விளக்குகள் (Soft lights), ஆட்டோமேட்டிக் டோர்கள், பயோ-டாய்லெட்ஸ், சிசிடிவி, எல்இடி ஸ்கிரீன்ஸ் மற்றும் சிறந்த இன்டீரியர்கள் போன்ற நவீன வசதிகளைக் கொண்டிருக்கும். அதேபோல இதில் இருக்கும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களில் கவாச் சிஸ்டம், கிராஷ்-ப்ரூஃப் டிசைன் மற்றும் ஆன்டி-க்ளிம்பர் டெக்னாலாஜி ஆகியவை அடங்கும்.
தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களில் சேர் கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் இடையே வேறுபாடு இருப்பதுபோல விரைவில் அறிமுகமாக உள்ள ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களின் First AC கோச்சானது, அதில் இடம்பெற உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது ஏசி கோச்களில் இருந்து தனித்து நிற்கும். முதல் வகுப்பு ஏசி-யை தேர்வு செய்யும் பயணிகள் அதிக வசதியான பெர்த்கள், குஷன் சீட்கள் மற்றும் இன்னும் சில மேம்பட்ட வசதிகளை எதிர்பார்க்கலாம்.
மேலும், விமான சேவைகளைப் போன்ற சேவைகளை வந்தே பாரத் ஸ்லீப்பரில் வழங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதில் சிறந்த உணவு மற்றும் பானங்கள் அடங்கும். மேலும், இந்த ரயில் பெட்டிகள் சிறந்த சேவைகளை வழங்க வழக்கத்தைவிட அதிக ஊழியர்கள்-பயணிகள் விகிதத்தை (staff-to-passenger ratio) கொண்டிருக்கும் என தெரிகிறது.
October 03, 2025 3:38 PM IST
