அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரங்கள் படுமும்முரமாக நடந்து வருகின்றன. வரும் நவம்பர் 5-ஆம் தேதி அமெரிக்க மக்கள் தங்களுடைய புதிய அதிபரை தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதம் வரை ஜோ பைடன் vs டொனால்டு ட்ரம்ப் என்று இருந்த போட்டி, கடைசி நேர க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் போல திடீரென யுடர்ன் அடித்து கமலா ஹாரிஸ் vs டொனால்டு ட்ரம்ப் என்று மாறியது.
கடுமையான பணவீக்கம், வெளிநாடுகளில் அவப்பெயர் என ஒருபுறம் ஜோ பைடனின் மீதான அதிருப்தியை குடியரசு கட்சியினர் கமலா ஹாரிஸின் பெயரில் எழுத முயற்சித்துக் கொண்டிருந்தாலும், பைடனின் வயது மற்றும் ஆரோக்கியம் மீதான சந்தேகத்தில் இருந்த ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள் பலருக்கும் அதிபர் வேட்பாளாராக கமலாவின் வருகை பெரும் நிம்மதியை கொடுத்தது.
இன்னொருபுறம், 2020 தேர்தல் தோல்விக்கு பிறகு ட்ரம்ப் ஆதரவாளர்கள் செய்த கலவரம், 2016 தேர்தல் பிரசாரங்களுக்கு பணம் கொடுத்தது என பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் டொனால்டு ட்ரம்ப். எனினும், அண்மையில் அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஒருவித எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம்.

இப்படி பரபரப்பான கட்டத்தில் அமெரிக்க தேர்தல் களம் இருந்து கொண்டிருக்கும் வேளையில், அதனை இன்னும் சூடாக்கும்படியான ஒரு சம்பவம் அண்மையில் நடந்தது. உலகப் புகழ்பெற்ற பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளித்ததுதான் அது. உலக இசையை ஓரளவு பின்தொடர்பவர்களுக்கு டெய்லர் ஸ்விஃப்ட்டை தெரியாமல் இருக்கமுடியாது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு பாப் இசைக் கலைஞர் வெளிப்படையாக அதிபர் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு தெரிவித்தது அமெரிக்க அரசியல் களத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியது.
வரப்போகும் தேர்தலில் அமெரிக்க வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை ஏற்கெனவே முடிவு செய்திருப்பார்கள் என்றாலும், எந்தப் பக்கம் சாய்வது என்று தெரியாமல் ஒருவித தடுமாற்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தப்படும் இசை ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.
முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தத் தேர்தலில் பாடல்கள் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த மாதம் சிகாகோவில் நடந்த ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில், வேட்பாளர் தேர்வு கிட்டத்தட்ட இசை நிகழ்ச்சியாகவே மாறிவிட்டிருந்தது. ஒவ்வொரு மாகாணத்தின் பிரதிநிதிகளும் வாக்களிக்க அழைக்கப்பட்டபோது, அதற்கேற்ற பிரபலமான பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டன. உதாரணமாக, அலபாமாவுக்கு பிரபலமான ‘ஸ்வீட் ஹோம் அலபாமா’ பாடலும், மிச்சிகனின் முறை வரும்போது, எமினெம் பாடிய ‘Lose Yourself’ பாடலும் ஒலிக்கவிடப்பட்டது சமூக வலைதளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

மாநாடு முடியும்போது 61 பாடல்கள் அடங்கிய ‘ஜனநாயகக் கட்சி தேசிய மாநாடு ப்ளேலிஸ்ட்’ ஒன்று ஸ்பாட்டிஃபை தளத்தில் உருவாக்கப்பட்டு கவனம் பெற்றது. மாநாட்டில் இந்தப் பாடல்கள் பயன்படுத்தப்பட்டபோது இசைக் கலைஞர்கள் யாருமே அதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இது ஜனநாயகக் கட்சிக்கும் மிகப் பெரிய சாதகமாக பார்க்கப்பட்டது. ஆனால், ட்ரம்பின் கூட்டங்களில் தங்களின் பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டதற்கு எதிராக சில இசைக் கலைஞர்கள் போர்க் கொடி உயர்த்தினர். அதில் செலின் டியான், ABBA, Adele, Foo Fighters உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்களும் அடக்கம்.

இரண்டு கட்சிகளுமே தங்களுடைய கொள்கைகளுக்கு ஏற்ற பாடல்களை தங்களுடைய பிரச்சாரங்களில் பயன்படுத்தி வந்தனர். இளம் தலைமுறையினரை கவரும் வகையிலான பாடல்களையும், பெண்கள் மற்றும் வெள்ளையர் அல்லாத இசைக் கலைஞர்களின் பாடல்களையும் கமலா தொடர்ந்து பயன்படுத்தினார். உதாரணமாக, அவர் பயன்படுத்திய “Femininomenon” என்ற பாடல், பெண் தலைமையையும், பாலின வேறுபாடுகளை களைவது குறித்தும் வலியுறுத்துகிறது.
இன்னொரு பக்கம், டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய மேடைகளில் அடிக்கடி பயன்படுத்திய பாடல், 1966-ல் வெளியான ஜேம்ஸ் பிரவுனின், “It’s a Man’s Man’s Man’s World”. இப்படியாக இரண்டு தரப்பும் பாடல்கள் வழியே தங்களுடைய பிரசார மேடைகளுக்கு வலு சேர்த்து வருகின்றனர்.
பாடல்களை தன்னுடைய பிரசாரங்களில் சிறப்பாக பயன்படுத்திவதில் கமலா ஹாரிஸ், ட்ரம்பை சற்றே பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் என்று சொல்லலாம். கமலா தன்னுடைய தீம் பாடலாக Beyoncé-ன் ‘ஃப்ரீடம்’ என்ற பாடலை முறையான அனுமதியுடன் பயன்படுத்தி வருகிறார். ஆனால், அதே பாடலை ஒரு வீடியோவில் பயன்படுத்திய ட்ரம்ப்புக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் அவர் அந்த பாடலை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளவும் செய்தார்.
அதேபோல, அமெரிக்காவின் தேசியக் கொடி இரண்டு கட்சிகளாலுமே பொதுவாக பயன்படுத்தப்பட்டாலும், ஜனநாயகக் கட்சியை காட்டிலும் குடியரசுக் கட்சியினர் தேசபக்தியை இந்தத் தேர்தலில் ஒரு முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். தேசப்பற்றை பறைசாற்றும் பாடல்களையும் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இப்படி இரண்டு கட்சிகளும் இசையை ஒரு முக்கிய அம்சமாக தங்களுடைய பிரசாரங்களில் பயன்படுத்தி வருவது, சமூக வலைதளங்கள் மற்றும் இசை வழியே சமூகத்தை பார்க்கும் இளம் வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அடிப்படையில், கமலா ஹாரிஸுக்கு 283 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட டெய்லர் ஸ்விஃப்ட்டின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக அண்மையில் நடத்தப்பட்ட சர்வேக்களில் கமலா ஹாரிஸ் முதல்முறையாக 50% ஆதரவுடன் முன்னிலை பெற்றுள்ளார். ட்ரம்புக்கு 45% சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. கமலா ஹாரிஸுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்த பிறகு டெய்லர் ஸ்விஃப்ட்டின் ஃபாலோயர்களின் எண்ணிக்கை 40-50% குறைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவற்றில் துளியும் உண்மையில்லை என்று அமெரிக்க ஊடகங்கள் ஃபேக்ட் செக் செய்துள்ளன.
மிகக் குறிப்பாக, டெய்லர் ஸ்விஃப்ட் தனது இன்ஸ்டா பதிவில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளிக்க கூறியிருந்த காரணம் அதிமுக்கியத்துவம் பெற்றது. அவர் தனது போஸ்டில், “உங்களைப் போல நானும் விவாதத்தை பார்த்தேன். நான் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்கிறேன். ஏனென்றால், அவர் உரிமைகளுக்காக போராடுகிறார். அவர் ஒரு உறுதியான, திறமையான தலைவர் என நான் கருதுகிறேன்.
நாம் குழப்பமில்லாமல், அமைதியான முறையில் வழிநடத்தப்பட்டால் இந்த நாட்டில் இன்னும் பலவற்றை சாதிக்க முடியும் என நம்புகிறேன். தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் டிம் வால்ஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மேலும், அவரின் அந்த முடிவால் நான் ஈர்க்கப்பட்டேன்” என்று டெய்லர் ஸ்விஃப்ட் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு எதிவினையாற்றும் வகையில், ட்ரம்ப் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட ஒரு வரி பதிவுதான் அவரது டரியலை பறைசாற்றியது. அந்தப் பதிவு இதுதான்: “நான் டெய்லர் ஸ்விஃப்டை வெறுக்கிறேன்.”
டெய்லர் ஸ்விஃப்ட் உள்ளிட்ட இசைக் கலைஞர்களின் ஆதரவு உண்மையிலேயே கமலா ஹாரிஸுக்கு கைகொடுக்குமா? தேர்தல் பிரசாரங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பரவலாக பயன்படுத்திய பாடல்கள் தேர்தல் முடிவுகளில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பன போன்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரிய இன்னும் சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
