மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் நியூஸ் 18 குழுமத்திற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பல விவாதங்களையும் கிளப்பியது.
அதன் தொடர்ச்சியாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியூஸ் 18 குழுமத்தின் ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பாஜக மோசடி செய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது. தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் அந்த கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. அவர்கள் கூறும் குற்றச்சாட்டு உண்மை என்றால் அந்த 2 மாநிலங்களிலும் காங்கிரஸ் அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். நாடு முழுவதும் சுமார் 12 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஒன்றோடு ஒன்று இணைக்கப்படவில்லை.
மின்னணு வாக்குப்பதிவு குறித்து தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் சிறுபிள்ளைத்தனமானது. தங்களது தோல்வியை மறைக்க எதிர்க்கட்சிகள் அப்படி கூறுகின்றன. அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யை பாஜக தவறாக பயன்படுத்தியது கிடையாது. யார் தவறு செய்கிறார்களோ, யார் ஊழல் செய்கிறார்களோ, அவர்கள் சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்கப்படுகிறார்கள்.
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சுதந்திரமாக செயல்படுகின்றன. நாங்கள் சொல்வது போல் அவர்கள் நடப்பது கிடையாது. மற்ற வெளிநாடுகளில் அரசியலில் மத்திய அரசு தலையிடாது. அந்த நாடுகளும் இந்தியாவில் நடக்கும் பிரச்சனைகளில் தலையிடக்கூடாது என்பதில் மத்திய அரசு மிக தெளிவாக உள்ளது. கடந்த காலங்களில் பலவீனமான அரசை இந்தியா கொண்டிருந்தது. இன்று வலிமையான பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் பாதுகாப்பாக உணர்கின்றனர்.
இந்தியர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். அவரது புகழுக்கு இதுவும் ஒரு காரணம். பாஜக ஆட்சி காலத்தில் சீனா இந்தியாவின் நிலத்தை அபகரிக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தான் சீனா இந்திய நிலங்களை ஆக்கிரமித்தது. அவர்களது ஆட்சிக் காலத்தில் நடந்த போரில் இந்தியா தோல்வியடைந்தது. அப்போது இழந்த நிலங்கள் குறித்து காங்கிரஸ் கட்சிதான் பதில் சொல்ல வேண்டும். என்று கூறியுள்ளார்.
.
