சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை, மத்திய அரசு ரூ. 50 உயர்த்தியிருக்கிறது.
மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் அறிவிப்பின்படி, நாளை (ஏப்ரல் 8) முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
அதன்படி, உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் ரூ. 503லிருந்து ரூ.553-ஆகவும், உஜ்வாலா திட்டத்தின்கீழ் வராத பொதுப் பயனாளிகளுக்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் ரூ. 803-லிருந்து ரூ. 853-ஆகவும் விலை உயரும்.

மத்திய அரசின் இந்த விலையுயர்வுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வரிசையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, “உலகெங்கும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. நியாயமாகப் பார்த்தால் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறைக்கப்படவேண்டும்.
ஆனால், இந்தப் பகல்கொள்ளை பா.ஜ.க அரசாங்கம் விலையை உயர்த்தி, ஏழை எளிய நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 26 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுக்கிறது.
கச்சா எண்ணெய் விலை உச்சத்திலிருந்தபோது கூட , காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 450தான். ஆனால், இன்று ரூ. 1000 ஆகிவிட்டது. பெட்ரோல், டீசல் விலையும் இருமடங்காகிவிட்டது.
இத்துடன் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை. நரேந்திர மோடி ஆட்சியில் சாதாரண மக்கள் நிம்மதியாக வாழவே முடியாது” என்று பதிவிட்டிருக்கிறார்.
