தேர்தல் பரப்புரைக்காக நாளை மறுநாள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருகிறார். இரண்டு நாட்கள் பயணத்தின்போது சிவகங்கை, மதுரை, கன்னியாகுமரி, தென்காசி தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். குமரி மாவட்டத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுடன், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் நந்தினி என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 13-ம் தேதி (சனிக்கிழமை) மதுரையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு பிரசாரம் செய்ய வருகிறார். இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலம் குமரி மாவட்டம் வருகிறார். நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் காலை 8.30 மணிக்கு அவர் வந்திறங்குகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்படும் அவர் தக்கலை மேட்டுக்கடைக்கு 9 மணிக்கு செல்கிறார்.
பின்னர் தக்கலை- திருவனந்தபுரம் சாலையில் தக்கலை மேட்டுக்கடையில் இருந்து பழைய பஸ் நிலையம் வரையில் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு நடைபெறும் ரோடு ஷோவில் அமித்ஷா கலந்து கொண்டு, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பா.ஜனதா வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு தாமரை சின்னத்துக்கு ஆதரவு திரட்டுகிறார்.
முன்னதாக, 12 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு, மதுரை வரும் அமித்ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை சென்று சிவகங்கையில் பாஜக சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து வாகன பேரணி சென்று வாக்குகள் கேட்கிறார்.
மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மதுரை வரும் அவர், மதுரை பாஜக வேட்பாளர் பேராசிரியர் இராம.சீனிவாசனுக்கு ஆதரவாக ரோடு ஷோ மேற்கொள்கிறார். அதன் பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொள்கிறார். இரவு மதுரையிலேயே அமித்ஷா தங்குகிறார்.
13 ஆம் தேதி, காலை விமான மூலம் திருவனந்தபுரம் செல்லும் அமித்ஷா, பாஜக வேட்பாளர் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக, வாகன பேரணி பரப்புரையில் ஈடுபடுகிறார். (காலை 10 மணிக்கு)
பின்னர் அங்கிருந்து தனி விமான மூலம் திருச்சி வரும் அவர் மத்திய உணவுக்கு பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகப்பட்டினம் சென்று பாஜக சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் (பாஜக வேட்பாளர் ரமேஷ் ) மதியம் 3 மணிக்கு பொதுக் கூட்டம்.
பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு திருச்சி வரும் அமித்ஷா அங்கிருந்து தனி விமான மூலம் தூத்துக்குடி சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தென்காசி செல்கிறார், அங்கு பாஜக சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளர் ஜான் பாண்டியனை ஆதரித்து, வாகன பேரணி பரப்புரையில் அமித்ஷா ஈடுபடுகிறார். அதைத்தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையம் சென்று அங்கிருந்து அமித்ஷா டெல்லி புறப்படுகிறார்.
