Last Updated:
பயணிகள் முன்பதிவு கவுன்ட்டர்களில் வாங்கிய டிக்கெட்டுகளையும், தற்போது ஆன்லைனில் ஐஆர்சிடிசி வலைதளம் மூலம் ரத்து செய்ய முடியும்.
நேரில் சென்று முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி வலைத்தளம் மூலம் ஆன்லைனில் ரத்து செய்யும் புதிய வசதியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. எனினும், கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களையும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவலை இந்தப் பதிவில் தெரிந்துகொள்வோம்.
பொதுவாக, நேரில் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டை நேரிலும், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டை ஆன்லைனிலும்தான் ரத்து செய்ய முடியும். இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே, நேரில் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டையும் ஆன்லைனில் ரத்து செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
பயணிகளின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக, இந்திய ரயில்வே தொடர்ந்து அதன் சேவைகளை மேம்படுத்தி வருகிறது. தற்போது, பெரும்பாலான ரயில் பயணிகள் இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கிறார்கள். ஐஆர்சிடிசி வலைத்தளம் அல்லது ஆப் மூலம் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளை, முன்பதிவு செய்தவாறே எளிதாக ரத்து செய்து பணத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் திரும்பப் பெறலாம்.
ஆனால், பயணிகள் முன்பதிவு கவுன்ட்டர்களில் வாங்கிய டிக்கெட்டுகளையும், தற்போது ஆன்லைனில் ஐஆர்சிடிசி வலைதளம் மூலம் ரத்து செய்ய முடியும். இது குறித்த படிப்படியான செயல்முறைகளை இங்கே பார்ப்போம்.
கவுன்ட்டர் டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி?
- பயணிகள் முன்பதிவு கவுன்ட்டர்களில் வாங்கிய டிக்கெட்டை ரத்து செய்ய, முதலில் ஐஆர்சிடிசி வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். அதில், “கேன்சல் டிக்கெட்” என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
- அதைத் தேர்ந்தெடுத்த பிறகு, கவுன்ட்டரில் பெற்ற டிக்கெட்டை ரத்து செய்வதற்கான தேர்வை பார்க்க முடியும். உங்களது தேர்வு உங்களை இந்த வலைத்தளத்திற்கு அழைத்துச் செல்லும். (https://www.operations.irctc.co.in/ctcan/SystemTktCanLogin.jsf).
- அதில், நீங்கள் கவுன்ட்டரில் முன்பதிவு செய்த டிக்கெட்டில் இருக்கும் பிஎன்ஆர் (PNR) எண் மற்றும் ரயில் எண்ணை, பாதுகாப்புக்கான கேப்ட்சாவுடன் டைப் செய்ய வேண்டும்.
- இதையடுத்து, பதிவுசெய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணுக்கு ஒரு OTP (ஒரு முறை கடவுச்சொல்) அனுப்பப்படும். உங்கள் டிக்கெட்டை ரத்து செய்வதைத் தொடர, இந்த ஓடிபி எண்ணை உள்ளிடவும். கவுன்ட்டரில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது, நீங்கள் வழங்கிய மொபைல் எண்ணுக்குத் தான் ஓடிபி எண் அனுப்பப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- ஓடிபி-ஐ டைப் செய்து உறுதிப்படுத்திய பிறகு, முன்பதிவு செய்த பயணிகளின் விவரங்கள் திரையில் காட்டப்படும். இதையடுத்து, சமர்ப்பி (Submit) என்கிற பட்டனை தொடுவதன் மூலம், நீங்கள் கவுன்ட்டரில் முன்பதிவு செய்த டிக்கெட் ரத்து செய்யப்படும்.
இதையும் படிக்க: 2026க்குள் 17,500 சாதாரண பெட்டிகள், 200 வந்தே பாரத் ரயில்கள், 100 அம்ரித் பாரத் ரயில்களை அறிமுகப்படுத்த திட்டம்…!
உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?
- ஆனால், பயணிகள் முன்பதிவு கவுன்ட்டரில் வாங்கிய டிக்கெட்டுக்கான பணத்தை திரும்பப் பெற, அருகிலுள்ள பயணிகள் முன்பதிவு கவுன்ட்டருக்குத்தான் செல்ல வேண்டும். ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டை கவுன்ட்டரில் சமர்ப்பித்த பின்னரே, பணம் திரும்ப வழங்கப்படும்.
- இந்திய ரயில்வே விதிகளின்படி, உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால், ரயில் புறப்படுவதற்கு குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக பயணிகள் முன்பதிவு கவுன்ட்டரில் டிக்கெட்டை டெபாசிட் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- காத்திருப்புப் பட்டியல் அல்லது ஆர்ஏசி (RAC) டிக்கெட்டுகளுக்கு, புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு, முன்பதிவு கவுன்ட்டரில், டிக்கெட்டை சமர்ப்பிப்பதன் மூலம் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம்.
இதையும் படிக்க: PM – Kisan scheme | PM – Kisan திட்டம் அப்டேட்: 19வது தவணை நிதி வெளியாகும் தேதி என்ன தெரியுமா…?
இதற்கு, நேரில் சென்றே டிக்கெட்டை ரத்து செய்து கொள்வோமே என்று பயணிகள் கூறி வரும் நிலையில், இவ்வாறு ஆன்லைனில் ரத்து செய்யும்போது பணத்தையும் ஆன்லைனில் வங்கிக் கணக்கில் திரும்பத் தரலாமே என்பது பயணிகளின் கருத்தாக உள்ளது.
February 05, 2025 3:50 PM IST
கவுன்ட்டரில் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் கேன்சல் செய்யலாம்; ஆனால் டிவிஸ்ட் என்ன தெரியுமா…?

