கெய்ரோ : வட ஆப்ரிக்க நாடான லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக, ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர முயன்ற, 61 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்படும் மக்கள், லிபியா கடல் பகுதி வழியாக ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக பயணிக்கின்றனர்.
சாதாரண ரப்பர் படகுகளில் ஆபத்தான கடல் வழி பயணம் மேற்கொள்ளும் இவர்களில் பலர், நீரில் மூழ்கி இறப்பது தொடர்கதையாக உள்ளது. இதுபோன்ற சட்டவிரோத கடல் வழி பயணத்திற்கு லிபியா முக்கிய புள்ளியாக உள்ளது.
இந்த ஆண்டில் மட்டும், லிபியா கடல் வழியாக பயணித்த 2,250க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர். இந்நிலையில், நேற்று 86 பேருடன் லிபியாவிலிருந்து, இத்தாலி நோக்கி புறப்பட்ட படகு, கடும் கடல் சீற்றத்தால் சுவாரா நகருக்கு அருகே கடலில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 61 பேர் பரிதாபமாக கடலில் மூழ்கி இறந்தனர். கடலில் தத்தளித்த மற்றவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

