சதுப்பு நிலம் பாதுகாப்பு ஆர்வலர் மற்றும் உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் ஜனார்த்தனன் கூறுகையில், ” ஊட்டி ஏரியின் இயற்கை எழிலை சிதைக்கும் வகையில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில், ஏரிக்கரையில் உள்ள புற்களையும் புதர்களையும் அழிக்க 3 மாதங்களுக்கு ஒருமுறை களைக்கொல்லி ரசாயனத்தை பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டிருப்பது வேதனை அளிக்கிறது. நீலகிரியில் மலை காய்கறி விவசாயத்திற்கு அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் எண்ணற்ற தாவர , பூச்சி இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன.
நீர்ப்பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் அதிகளவில் உள்ள ஊட்டி ஏரியின் கரையில் களைக்கொல்லி ரசாயனங்களைப் பயன்படுத்தினால் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாவட்டத்தில் ரசாயனப் பயன்பாட்டை தடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி உத்தரவிடுவது அதிர்ச்சியாக இருக்கிறது. சுற்றுலாவின் பெயரால் இயற்கை வளங்களை அழிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது ” என்றார் ஆதங்கத்துடன்.

