ஏமனில் தன்னுடைய நண்பரும், தொழில் ரீதியான கூட்டாளியாகவும் இருந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில், கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த, மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நிமிஷா பிரியா. தற்போது 35 வயதாகும் இவர், 2008ம் ஆண்டு செவிலியர் பணிக்காக ஏமன் நாட்டிற்குச் சென்றார். அங்கு பல மருத்துவமனைகளில் பணியாற்றியவர், பிறகு 2011-ம் ஆண்டு கேரளா தொடுபுழாவைச் சேர்ந்த டாமி தாமஸ் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. டோமி தாமஸ் தனது மகளுடன் தற்போது கேரளாவில் வசிக்கிறார்.

கடந்த 2015ஆம் ஆண்டு, நிமிஷா அங்குள்ள மருத்துவமனை பணியை உதறிவிட்டு, தனியாக க்ளினிக் தொடங்கினார். ஏமன் நாட்டு விதிப்படி, அந்நாட்டு குடிமகனால் தான் க்ளினிக் தொடங்கமுடியும். எனவே, ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்துல் மஹ்தி என்பவரை பார்ட்னராக சேர்த்துக்கொண்டு, க்ளினிக் தொடங்கியிருக்கிறார்.
