2025 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின்போது பேரவைக்குள் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் இசைக்கப்படாததால் சிறிது நேரத்திலேயே அவையிலிருந்து வேகவேகமாக வெளியேறினார். அந்த சம்பவம் அப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தனர்.
அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின், “அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு! அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் ஆளுநர். கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. ‘தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?’ என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா!” என்று கூறியிருந்தார்.
