வேங்கைவயல் வழக்கில் 3 பட்டியலின இளைஞர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதற்கு எதிராக நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் திருமாவளவன். உண்மைக் குற்றவாளிகள் காப்பாற்றப்படுவதாகவும், வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் தமிழக காவல்துறையின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது, “வேங்கைவயல் பிரச்னையில் சிபிசிஐடி விசாரணை ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஊள்ளூர் குற்றப்பிரிவு காவலர்கள் விசாரிக்கக் கூடாது, சிறப்பு புலனாய்வு விசாரணைத் தேவை என நாம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சிபிசிஐடி நியமிக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு புகார் அளித்தவர்களே, பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த வழக்குக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம் இந்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு அரசு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
வேங்கைவயல் கிராம மக்களும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இன்று காலையில் காவல்துறையின் போக்கைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை அச்சுறுத்தி அந்த பகுதியின் விசிக நிர்வாகிகளைக் கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திமுக அரசு சமூக நீதியின் பக்கம் நிற்கும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்க அரசு துணையாக இருக்கும் என்றும் நம்புகிறோம்.
