குஷ்பு, உமா ரதி உள்ளிட்டோரை சிம்மக்கல் பகுதியில் உள்ள ‘ஆயிரம்வீட்டு யாதவர் ஆட்டுமந்தை திருமண மண்டப’த்தில் அடைத்தனர்.
‘ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் எங்களை அடைத்து வைத்துள்ளதால், ஆடுகளின் சத்தத்தோடு கடுமையான துர்நாற்றம் வீசுவதால் அங்கு இருக்க முடியவில்லை, எங்களை இழிவுபடுத்த இதுபோன்ற ஆட்டு மந்தையில் அரசு எங்களை அடைத்து வைத்திருக்கிறது’ என்று புகார் எழுப்பியவர்கள், காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி மண்டபத்திற்குள்ளேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆட்டு மந்தையில் பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை அடைத்து வைத்ததாக கூறி வெளியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகளை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனால் சிம்மக்கல் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் குஷ்பு உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மண்டபம் அருகேயுள்ள மந்தைக்கு மேலும் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள் கொண்டுவரப்பட்டது. அப்போது மண்டபத்தின் முன்பாக கூடியிருந்த பாஜகவினருக்கும் ஆட்டுமந்தைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கைது செய்யப்பட்டதால் லண்டன் பயணம் ரத்து
தன் மகளுடன் இரவு 9 மணிக்கு சென்னையிலிருந்து லண்டன் செல்ல திட்டமிருந்த குஷ்பு போராட்டத்தில் கலந்துகொண்டு மதியம் 3.30 மணிக்கு மதுரையிலிருந்து விமானத்தில் சென்னை செல்லத் திட்டமிட்டிருந்தார். அதற்காக முன்னதாக விடுவிக்க முடியுமா என்று காவல்துறை தரப்பில் பாஜகவினர் வேண்டுகோள் வைத்ததாக சொல்லப்பட்ட நிலையில், காவல்துறை மறுத்துள்ளது. இதனால் மண்டபத்துக்குள் கூட்டத்தினரோடு இருந்த குஷ்பு படபடப்புடன் இருந்தார். இதற்கிடையே குஷ்புவை பார்ப்பதற்காக பொதுமக்கள் வருகை தர ஆரம்பித்ததால் சிம்மக்கல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் பின்பு மாலை 6 மணிக்கு மேல்தான் குஷ்பு விடுவிக்கப்பட்டார்.
“ஆட்டுக்குட்டிகள் இருந்த இடத்தில் அடைத்து வைத்தார்கள், பரவாயில்லை. மேலிட உத்தரவை ஃபாலோ அப் செய்து ஆட்டு மந்தையில் அடைத்தார்கள், காவல்துறையினர் மேலிட சார் உத்தரவை ஃபாலோ அப் செய்துள்ளனர். எங்களது போராட்டம் வெற்றிபெற்றுள்ளது” என்று கூறிவிட்டு கிளம்பினார்.
