Last Updated:
முதல் பிரிவில் உள்ளவர்கள் தனது மனைவி அல்லது கணவருடன் எந்தவித பாதுகாப்பு சோதனையும் இல்லாமல் விமான தளத்திற்கு செல்ல முடியும்.
இந்தியாவில் சில விஐபிகளுக்கு மட்டுமே விமான நிலையங்களில் எந்த விதமான சோதனையும் நடத்தப்படுவது கிடையாது. அவர்களது கார் நேரடியாக விமானத்தின் அருகே செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. யார் அந்த விஐபிகள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் சர்வதேச விமான நிலையமாக இருந்தாலும் சரி, உள்ளூர் விமான நிலையமாக இருந்தாலும் சரி பாதுகாப்பு சோதனைகள் மிக கடுமையாக, பயணிகளிடம் நடத்தப்படுகிறது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக இத்தகைய சோதனைகள் மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இந்த சோதனைகளால் பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
இத்தகைய எந்த சோதனையையும் எதிர்கொள்ள தேவையில்லாத விஐபிகள் இந்தியாவில் உள்ளனர். அவர்கள் வரும் கார் அவர்களை விமானத்திற்கு அருகே இறக்கி விடுகிறது. இத்தகைய விஐபிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
முதல் பிரிவில் உள்ளவர்கள் தனது மனைவி அல்லது கணவருடன் எந்தவித பாதுகாப்பு சோதனையும் இல்லாமல் விமான தளத்திற்கு செல்ல முடியும். இரண்டாவது பிரிவில் தனிநபர் மட்டுமே தனது சொந்த வாகனத்தில் விமான தளத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மூன்றாவது பிரிவில் குறிப்பிட்ட விமான நிலையங்களுக்கு மட்டுமே விஐபிகள் விமான நிலையங்கள் தளத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
முதல் வகை விஐபிகளில் இந்திய குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், வெளிநாடுகளின் குடியரசு தலைவர்கள், வெளிநாடு அரசுகளின் தலைவர்கள் ஆகிய 5 பிரிவினர் எந்தவித சோதனையும் இல்லாமல் நேரடியாக சர்வதேச விமான தளத்துக்கு பாதுகாப்புடன் அனுமதிக்கப்படுகின்றனர்.
இரண்டாவது பிரிவில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை சபாநாயகர், ஜனாதிபதியின் மனைவி, துணை ஜனாதிபதியின் மனைவி, வெளிநாட்டு தூதர் ஆகியோர் அனுமதிக்கப்படுகிறார்கள்.
மூன்றாவது பிரிவில் உள்ள விஐபிகள் சொந்த மாநிலத்துக்குள் உள்ள விமான நிலையங்களில் மட்டுமே சோதனை ஏதும் இன்றி விமான தளத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்களில் மாநில கவர்னர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை கவர்னர்கள், முதலமைச்சர் ஆகியோர் அந்தந்த மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் உள்ள விமான நிலையங்களில் சோதனை ஏதுமின்றி நேரடியாக விமான தளத்துக்கு செல்லலாம்.
March 18, 2025 8:29 PM IST
எந்த சோதனையும் கிடையாது.. ஏர்போர்ட்டில் இவர்களது கார் நேரடியாக விமானம் வரை செல்லும்.. யார் அந்த விஐபி-க்கள் தெரியுமா?

