Last Updated:
பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோடிக்கணக்கான மக்கள் புனித நீராட வருகின்றனர்.
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோடிக்கணக்கான மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர். பக்தர்கள் இடர்பாடின்றி புனித நீராட சிறப்பான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு முடுக்கிவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். கடந்த 29-ஆம் தேதி மவுனி அமாவாசை நாளில் மட்டும் சுமார் 10 கோடி பேர் புனித நீராடினர். அன்றைய தினம் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு கூட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்று பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், நடிகர் நடிகைகள், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என ஏராளமான விவிஐபிக்களும் புனித நீராடினர். 26-ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தில் மகா கும்பமேளா நிறைவடைவதால் கடந்த சில நாட்களாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
பால்குன் மாதத்தில் கிருஷ்ண பக்ச சதுர்தசி திதியில், மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்து வேதங்களின் படி பிப்ரவரி 26- ஆம் தேதி காலை 11.08க்கு மகா சிவராத்திரி தொடங்கி 27-ஆம் தேதி காலை 8.54 மணிக்கு நிறைவடைகிறது. மகா சிவராத்திரி தினத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் புனித நீராடுவது மிகப்பெரிய பாக்கியம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. காலை 05:09 முதல் 06:59 வரை பிரம்ம முகூர்த்தம், மாலை 6:16 முதல் 6:42 வரை அந்தி நேரம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நிஷிதா முஹூர்த்தமானது நள்ளிரவு 12:09 முதல் 12:59 வரை நிகழும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மகா கும்பமேளா குறித்து தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு!
மகா சிவராத்திரியன்று கோடிக்கணக்கான மக்கள் கும்பமேளாவுக்கு வருகை தருவார்கள் என்பதால், மாநில அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல், மக்களின் பாதுகாப்பு, விஐபிக்களின் வருகை என தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
February 25, 2025 8:06 AM IST

