Last Updated:
தெலங்கானாவில் ராம்பாபுவின் திருமணத்திற்கு வந்த 4 மற்றும் 5 வயது சிறுமிகள் காருக்குள் சிக்கி உயிரிழந்தனர். CHILD LOCK காரணமாக மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
தெலங்கானாவில் தாய்மாமனின் திருமணத்துக்கு வந்த இரு சிறுமிகள் காருக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள தாமரகிடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு. இவரது திருமணம் உற்றார் உறவினர் புடைசூழ திங்கட்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக ராம்பாபுவின் சகோதரிகள் தங்களது குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் வந்திருந்தனர். தாய்மாமன் திருமணத்திற்கு வந்த 4 வயதான அபிநயஸ்ரீ மற்றும் 5 வயதான தன்மையஸ்ரீ, திடீரென மாலை நேரத்தில் காணாமல் போயுள்ளனர்.
பெற்றோர், உறவினர்கள் அனைவரும் திருமண வேலையில் ஈடுபட்டிருந்ததால் குழந்தைகளை கவனிக்காமல் இருந்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் காணாததால், உணவினர்கள் அனைவரும் கிராமம் முழுவதும் சல்லடை போட்டு தேடியுள்ளனர். பல்வேறு பகுதிகளில் தேடியும் குழந்தைகள் கிடைக்காத நிலையில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணமகனின் காரில் ஏதேச்சையாக உறவினர்கள் எட்டிப் பார்த்துள்ளனர்.
அப்போது, குழந்தைகள் இருவரும் மயங்கிய நிலையில் காருக்குள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, காரின் கண்ணாடியை உடைத்து குழந்தைகளை மீட்ட உறவினர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் இறந்து விட்டதாக கூறியதை கேட்டு ஒட்டுமொத்த கல்யாண வீடுமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தைகளின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், சிறுமிகள் இருவரும் தனது மாமனின் காருக்குள் ஏறி பின் இருக்கையில் விளையாடியது தெரியவந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக CHILD LOCK விழுந்ததால், கார் கதவு தானாகவே உள்பக்கம் பூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில், நீண்ட நேரமாக உள்ளே மாட்டிக்கொண்ட சிறுமிகள் மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதும், உடற்கூராய்வு முடிவுக்குப் பின்னர் தான், உண்மையான காரணம் தெரியவரும் எனவும் கூறியுள்ளனர். அதேவேளையில், குழந்தைகளின் மரணத்தில் வேறு ஏதும் காரணம் உள்ளதா என்று கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தாய்மாமனின் திருமணத்திற்கு வந்த சிறுமிகள் இருவர், காருக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவத்தால், கல்யாண வீடு மட்டும் இன்றி ஒட்டுமொத்த கிராமமுமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
April 15, 2025 6:54 PM IST

