20 மாத குழந்தை அனாபியா ஷேக் கோவாவில் உள்ள துர்காபட்டில் உள்ள தனது தாய் மாமா வீட்டில் இருந்துள்ளார். வெள்ளிக்கிழமை, காலை 7.45 மணியளவில், குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறது. இதை பார்த்த அங்கிருந்த தெருநாய்கள் மொத்தமாக சேர்ந்து தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை, போண்டாவில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
குழந்தை தனது தாய் மாமாவின் வீட்டிற்கு அருகில் மயக்கமடைந்த நிலையில் கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில், “நாய்கள் கூட்டத்தால் கடிக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட பல காயங்களின் ரத்தக்கசிவு” மரணத்திற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்த கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக போண்டா நகராட்சி மன்றத் தலைவர் ஆனந்த் நாயக் தெரிவித்தார். “இது ஒரு கொடூரமான சம்பவம். சிறு பெண் குழந்தை நாய்களால் கடித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. ஒரு நகராட்சியாக, நாய்களின் கருத்தடை முயற்சிகளுக்காக விலங்குகளுக்கான மக்கள் அமைப்புடன் நாங்கள் இணைந்துள்ளோம். தெருநாய்களுக்கான தங்குமிடம் ஒன்றையும் நாங்கள் முன்மொழிந்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யூரி அலெமாவோ கூறுகையில், “நமது மாநிலத்தில் தெரு நாய்களின் அச்சுறுத்தல் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த காலங்களில் ஏராளமான தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. அது இன்றுவரை தொடர்கின்றன. அதிகரித்து வரும் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், அரசாங்கம் செயலற்றதாகத் தெரிகிறது. கடற்கரைகள் முதல் சட்டமன்ற வளாகம் வரை மாநிலம் முழுவதும், தெரு நாய்களின் தாக்குதல்கள் குறித்த பயம் எல்லா இடங்களிலும் நிலவுகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பயனுள்ள நடவடிக்கைகளுக்கான நேரம் இது” என்றார்.
கால்நடை பராமரிப்புத் துறையின் சமீபத்திய மதிப்பீட்டின்படி, கோவாவில் 56,000-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன. இந்த மாத தொடக்கத்தில் மக்களவையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, கோவாவில் நாய் கடித்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 8,057 ஆக இருந்தது.
இது 2023-ல் 11,904 ஆக அதிகரித்துள்ளது. 2024-ல், நாய் கடித்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் 17,236 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும், கோவா மாநிலத்தில் 1,789 நாய் கடித்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், வடக்கு கோவாவின் அஞ்சுனாவில் ஏழு வயது சிறுவன் ஒருவன் நாய் தாக்கி இறந்தான். வீட்டு பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த தனது தாயுடன் அந்த சிறுவன் முதலாளியின் வீட்டிற்கு சென்றிருந்தான். அங்கு அவர்களது வளர்ப்பு நாய் சிறுவனின் கழுத்து மற்றும் உடலில் கடித்துள்ளது. இந்த சம்பவம் மக்களிடையே கோபத்தை தூண்டியதோடு, சில “கொடூரமான” நாய் இனங்களை தடை செய்வது உட்பட கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
பிப்ரவரியில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ராட்வீலர் மற்றும் பிட்புல் நாய் இனங்களைத் தடை செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்தார். மாநிலம் முழுவதும் இந்த இரண்டு நாய் இனங்களின் விற்பனை, இறக்குமதி மற்றும் இனப்பெருக்கம் மீதான தடையை உள்ளடக்கிய கோவா விலங்கு இனப்பெருக்கம் மற்றும் வீட்டு விதிமுறைகள் மற்றும் இழப்பீட்டு அவசரச் சட்டம் 2024-ல் மாநில அரசு ஒரு திருத்தத்தைக் கொண்டுவரும் என்றும் அவர் கூறியிருந்தார்.
April 29, 2025 6:42 PM IST
