அப்போது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தனது வாதங்களை முன்வைக்க முற்பட்டபோது, “இந்த மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பதை முதலில் பார்க்க வேண்டியிருக்கிறது.
எனவே இந்த மனு மீதான விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு, கேரள அரசுகள் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை முதலில் கேட்போம்” எனத் தலைமை நீதிபதி அறிவித்தார்.
அதன்படி கேரளா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், “ஏற்கனவே மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்காமல் இருப்பது தொடர்பான பஞ்சாப் மாநில அரசின் வழக்கில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக என்ற அரசியல் சாசன பிரிவு 200-ல் உள்ள வார்த்தையை உச்ச நீதிமன்றம் பகுத்தாய்ந்திருந்தது.

தமிழ்நாடு அரசு வழக்கில் அதற்கான காலக்கெடு என்பது நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மாநில சுயாட்சி, மத்திய – மாநில அரசுகளின் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட அனைத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஆய்வு செய்திருக்கிறது.
பஞ்சாப் வழக்கில் மூன்று நீதிபதிகள் அமர்வும், தமிழ்நாடு, தெலங்கானா வழக்குகளில் இரண்டு நீதிபதிகள் அமர்வும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
எனவே, இதில் புதிதாக விசாரிக்க எதுவும் இல்லை. இந்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை விசாரிப்பது என்பது தேவையில்லாதது.
ஏற்கனவே, குஜராத் சட்டப்பேரவை தொடர்பான சில வழக்குகளில் குடியரசுத் தலைவர் கேள்வியெழுப்பியபோது அவை திருப்பியனுப்பப்பட்டன.
அதேபோல இதில் குடியரசுத் தலைவர் அனுப்பிய கடிதத்தை அவருக்கே திருப்பி அனுப்ப வேண்டும்” என வாதங்களை முன்வைத்தார்.
