Last Updated:
கேரளாவில் உள்ள ஒரு உணவகம் ஒன்றில், பரோட்டா விற்று தீர்ந்துவிட்டதாக கூறியதால் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கொல்லத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பரோட்டா விற்று தீர்ந்துவிட்டதாக கூறிய ஹோட்டல் உரிமையாளரை இரண்டு பேர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் நகரப் பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அமல் குமார் என்ற நபர் “செயின்ட் அந்தோணி” என்ற டீ ஸ்டாலுடன் கூடிய ஒரு சிறிய உணவகத்தை நடத்தி வருகிறார். இங்கு இரவில் பரோட்டா உள்ளிட்ட டிபன் வகைகளை விற்பனை செய்து வருகிறார்.
தேநீர் கடைக்கு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் பரோட்டா மற்றும் கறி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு சாப்பாடு முடிந்துவிட்டதாகவும், தனது கடை மூடப்படுவதாகவும் குமார் கூறியதாகத் தெரிகிறது. மேலும், அருகில் வேறு கடைகள் இருப்பதாகவும் அங்கு சென்று விசாரித்து பார்க்கும்படியும் கூறியுள்ளார்.
குமாரின் கூற்றுப்படி, தன்னிடம் பணம் இல்லாததால் அந்த நபர் குமாரின் கடைக்கு வந்ததாக கூறியுள்ளார். மேலும், குமார் சில நேரங்களில் பணம் இல்லையென்றால் பின்னர் தருமாறு கூறுவதால், அவர் இங்கு வந்ததாக கூறப்படுகிறது.
குமார் தனது கடையில் உணவு இல்லை என கூறியதை கேட்ட அந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கோபமாக கத்திக்கொண்டே அங்கிருந்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்து சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, அந்த நபர் மற்றொரு நபருடன் திரும்பி வந்து “பரோட்டா பரிமாற மாட்டாயா” என்று கேட்டு குமாரைத் தாக்கியுள்ளார். இதனால் அவரது தலை மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து விளக்கிய குமார், தன்னிடம் தாக்குதல் நடத்திய இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறினார். தாக்குதல் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது அந்தப் பகுதியில் எதிர்பாராத விதமாக ஒரு போலீஸ் வாகனம் ரோந்துப் பணிக்காக வந்துள்ளது. இதனைப் பார்த்த அந்த இரண்டு இளைஞர்களும் தப்பித்து சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், காயமடைந்த ஓட்டல் உரிமையாளர் அமல் குமாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவசர அவசரமாக சென்றதால் அவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்றனர்.
போலீசார் அந்த வாகனத்தைக் கைப்பற்றி, தாக்குதல் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இது குறித்து குமார் புகார் அளித்துள்ள நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. விரைவில் அந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பரோட்டா இல்லை என்று கூறியதால் கடை உரிமையாளரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

