செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, “அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்” என்று கறாராகப் பேசியிருக்கிறார்.
சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் “அதிமுக ஒன்றிணைய வேண்டும்’ என்ற இதே கருத்தை கூறிவரும் நிலையில், செங்கோட்டையனும் இதை வழிமொழிந்து பேசியிருப்பது அதிமுக தொண்டர்களிடையே பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து இன்று செங்கோட்டையன் அமைப்புச் செயலாளர் பொறுப்பு மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாகவும், அத்துடன் அவரது ஆதரவாளர்களான ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகளும் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது அதிமுக-வில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
