Last Updated:
இளைஞர் ஒருவர் பேஸ்புக் நேரலையில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடகாவில் மனைவி கொடுமைப் படுத்துவதாக கூறி, இளைஞர் ஒருவர் பேஸ்புக் நேரலையில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜெயாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சல்மான் பாஷா. இவர் குவைத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வந்துள்ளார். சல்மான் பாஷாவுக்கும், சையது நிகாத் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு பேற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நிகாத் இரண்டாவதாக கர்ப்பமானபோது, சல்மான் பாஷா மீண்டும் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார். இதையடுத்து, தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நிகாத், தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும், குவைத்தில் இருந்து சொந்த ஊர் திரும்பியதும் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த நிகாத், குழந்தைகளை கூட பார்க்கவிடாமல் சல்மானை விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப் படுத்துவதாக கூறி, சல்மான் பாஷா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பேஸ்புக் நேரலையில் பேசியபடி விபரீத முடிவு எடுத்தவர், தனது மனைவிக்கு சையது புர்ஹான் உதீன் என்பவருடன் முறை தவறிய உறவு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அரசியல் பின்புலம் கொண்ட அவர், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சாடியுள்ளார்.
இது தொடர்பாக புகார் அளித்தால், போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் கூறியுள்ளார். சல்மான் பாஷா, தற்கொலை முயற்சி மேற்கொண்ட வீடியோவை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனிடையே, கணவர் சல்மான் பாஷா மீது அவரின் மனைவி நிகாத் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு முன்பு கணவர் தன்னை மிரட்டுவதற்காக சோப்பை தண்ணீரில் கலக்கி குடித்து நாடகம் ஆடியதாக கூறியுள்ளார்.
மேலும், தான் வேலை பார்க்கும் இடத்திற்கே வந்து ஆசிட் வீசுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் அடிப்படையில் தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். மனைவி கொடுமைப் படுத்துவதாக கூறி, இளைஞர் ஒருவர் பேஸ்புக் நேரலையில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Bangalore,Karnataka
October 08, 2025 8:39 PM IST
திருமணத்தை மீறிய உறவு.. அரசியல் பின்புலம்.. கொலை மிரட்டல்.. மனைவி மீது கணவன் அடுக்கடுக்கான புகார்!

