Last Updated:
மனைவிக்கு கணவர் இப்படி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் பாராட்டியுள்ளார்கள்.
புதிதாக திருமணம் முடித்த புதுமண தம்பதியினர் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். அவர்கள் செய்த காரியத்தை பல்வேறு தரப்பினரும் பாராட்டியுள்ளார்கள்.
பிகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு கடந்த 19ஆம் தேதி திருமணம் முடித்த புதுமண தம்பதியினர் மாநிலம் முழுவதும் கவனம் பெற்றுள்ளார்கள். இதில் மணமகள் தனது பட்டப்படிப்பு இறுதி ஆண்டில் படித்து வந்துள்ளார்.
19ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில் மறுநாள் அவருக்கு இசை பாட பிரிவில் தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருமணம் முடிந்து மறுநாளே தனது கணவருடன் மணமகள் தேர்வை எழுத வந்துள்ளார். திருமண கோலத்திலேயே அவர் தேர்வு மையத்துக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்வு எழுதிய மற்ற மாணவ மாணவிகளும் புதுமண தம்பதியை பார்த்து வியந்ததுடன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்த தேர்வை தான் நல்ல முறையில் எழுதியதாகவும் தனது கணவர் தனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் மணமகள் கூறியுள்ளார்.
திருமண களைப்பு, தூக்கமின்மை இருந்த போதிலும் பட்டம் பெற வேண்டும் என்பதற்காக தேர்வை எழுத நேரில் வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அடுத்ததாக இன்னும் சில தேர்வுகள் உள்ளதால் தான் மீண்டும் படிப்புக்கு தயாராக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க – இந்தியாவிற்கு 2 புல்லட் ரயில்களை பரிசாக வழங்கும் ஜப்பான்…! விரைவில் சோதனை ஓட்டம்…
தற்போது இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மனைவிக்கு கணவர் இப்படி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் பாராட்டியுள்ளார்கள்.
April 22, 2025 5:48 PM IST

