Last Updated:
இனி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு கூட உங்களால் டிக்கெட் புக்கிங் செய்ய முடியும். இது கடைசி நிமிடத்தில் பயணத்தை திட்டமிடும் பயணிகளுக்கு நிச்சயமாக பயனுள்ள ஒரு அம்சமாக இருக்கும்.
ரயில் பயணத்தை அதிக நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும், பயணிகளுக்கு உகந்ததாகவும் மாற்றுவதற்கான மற்றுமொரு படியை இந்திய ரயில்வே துறை எடுத்து வைத்துள்ளது. அதன்படி, இனி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு கூட உங்களால் டிக்கெட் புக்கிங் செய்ய முடியும். இது கடைசி நிமிடத்தில் பயணத்தை திட்டமிடும் பயணிகளுக்கு நிச்சயமாக பயனுள்ள ஒரு அம்சமாக இருக்கும்.
தெற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் குறிப்பிட்ட சில ரயில்களுக்கு இந்த அம்சத்தை இந்திய ரயில்வே துறை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் முக்கியமான நகரங்களை அதிவேகத்தில், நவீன வசதிகளுடன் இணைக்கும் வகையில் 114 வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயங்கி வருகிறது. இப்போது வரை ஆரம்ப ரயில் நிலையத்தில் இருந்து, வந்தே பாரத் ரயில் புறப்பட்ட பிறகு நடுவில் வரக்கூடிய ரயில் நிலையங்களுக்கு டிக்கெட் புக் செய்வது அனுமதிக்கப்படவில்லை.
இருக்கைகள் காலியாக இருந்தால்கூட டிக்கெட்டுகளை உங்களால் புக்கிங் செய்ய முடியாது. எனினும், இந்த புதிய மாற்றம் மூலமாக பயணிகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களை இணைக்கும் முக்கிய வழித்தடங்களில் இந்த அம்சத்தை முதன்முதலாக இந்திய ரயில்வே அமல்படுத்த உள்ளது.
புறப்படுவதற்கு வெறும் 15 நிமிடங்களுக்கு முன் ஆன்லைனில் வந்தே பாரத் விரைவு ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி?
- முதலில் www.irctc.co.in என்ற வெப்சைட் அல்லது IRCTC ரயில் கனெக்ட் அப்ளிகேஷனை திறக்கவும்.
- ஏற்கனவே உங்களுக்கு அக்கவுண்ட் இருந்தால் லாகின் விவரங்களை பயன்படுத்தி உள்நுழையவும் அல்லது புதிய ஒரு அக்கவுண்டை உருவாக்குங்கள்.
- நீங்கள் ரயில் ஏறும் நிலையம், சேர வேண்டிய இடம், பயண தேதி மற்றும் வந்தே பாரத் ரயில் ஆப்ஷன் ஆகிய விவரங்களை தேர்வு செய்யவும்.
- இப்போது எந்தெந்த இருக்கைகள் காலியாக இருக்கின்றன என்பதை சிஸ்டம் டிஸ்பிளே செய்யும்.
- எக்ஸிக்யூடிவ் கிளாஸ் அல்லது சேர் கார் மற்றும் ரயில் ஏறப்போகும் நிலையம் ஆகியவற்றை தேர்வு செய்யுங்கள்.
- ஆன்லைனில் பேமெண்ட் செலுத்திய பின் SMS மற்றும் இமெயில் வழியாக இ-டிக்கெட்டை பெறுவீர்கள்.
20631 – மங்களூரு சென்ட்ரல் – திருவனந்தபுரம் சென்ட்ரல்
20632 – திருவனந்தபுரம் சென்ட்ரல் – மங்களூரு சென்ட்ரல்
20627 – சென்னை எக்மோர் – நாகர்கோவில்
20628 – நாகர்கோவில் – சென்னை எக்மோர்
20642 – கோயம்புத்தூர் – பெங்களூரு
20646 – மங்களூரு சென்ட்ரல் – மடுகவான்
20671 – மதுரை – பெங்களூரு
20677 – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – விஜயவாடா
- திடீரென்று அல்லது அவசரத்தில் பயணத்தை மேற்கொள்ளும் நபர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
- இந்த அம்சம் மூலமாக காலியாக உள்ள இருக்கைகள் நிரப்பப்பட்டு, ரயில் இருக்கை திறன் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது.
- இனி காத்திருப்புப் பட்டியல் அல்லது கடைசி நிமிட மாற்று போக்குவரத்தை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
- மேம்படுத்தப்பட்டுள்ள இந்த பயணியர் ரிசர்வேஷன் சிஸ்டம் என்பது இந்திய ரயில்வே ஏற்படுத்தியுள்ள டிஜிட்டல் மாற்றம் மற்றும் ஸ்மார்டான பயண தீர்வுகளை வெளிப்படுத்துகிறது.
August 09, 2025 3:33 PM IST
வந்தே பாரத் ரயில்களில் அறிமுகமாகும் புதிய அம்சம்…! 15 நிமிடங்களுக்கு முன்பு கூட டிக்கெட் புக்கிங் செய்யலாம்…

