Last Updated:
மூத்த ஆயுதப்படை வீரர்கள் (ராணுவ அதிகாரிகள்) மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தனியுரிமையை மதிப்பது குறித்து நாட்டில் உள்ள ஊடகங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் முக்கிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
மூத்த ஆயுதப்படை வீரர்கள் (ராணுவ அதிகாரிகள்) மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தனியுரிமையை மதிப்பது குறித்து நாட்டில் உள்ள ஊடகங்களுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில் முக்கிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில், ‘பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளின் வீடுகளின் முகவரிகளை வெளியிடுவதையும், அவர்களது குடும்பத்தினரை நேர்காணல் செய்வதையும் தவிர்க்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை போன்ற முக்கிய ராணுவ நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ள முப்படைகளில் உள்ள மூத்த அதிகாரிகள் தங்கள் தலைமைப் பொறுப்புகள் காரணமாக பொதுமக்களின் கவனத்திற்கு வந்துள்ளனர். இந்த திடீர் கவனம் ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் தனிப்பட்ட வாழ்க்கை வரை விரிவடைந்துள்ளதாக அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
எனவே, ஊடகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் ராணுவ அதிகாரிகளின் வீடு வரை சென்று, அவர்களின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், மேலும் அவர்களின் அதிகாரப்பூர்வ தொழில்முறை கடமைகளுடன் தொடர்பில்லாத தனிப்பட்ட செய்திகளையும் சேகரித்து வெளியிட மிகுந்த ஆர்வம் காட்டியதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஊடகத்தினரின் இத்தகைய செயல்கள் மிகவும் பொருத்தமற்றவை மற்றும் ராணுவ அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கண்ணியம், தனியுரிமை மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்யக் கூடியவையாகவும் இருக்கின்றன. ராணுவத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் முக்கியப் பணிகளில் இருந்தாலும், அவர்களின் குடும்பங்கள் இன்னும் சாதாரண குடிமக்களாகவே வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் உரிய மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்.
எனவே, ஊடகத்தினர் அதிகாரப்பூர்வ அழைப்பு அல்லது அனுமதி இல்லாமல் பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளின் குடியிருப்பு முகவரிகள், குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் அல்லது பிற தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவதையோ அல்லது ஒளிபரப்புவதையோ தவிர்க்க வேண்டும்.
தனிப்பட்ட கதைகள் அல்லது நேர்காணல்களுக்காக ஆயுதப் படை வீரர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினரை நேரில் சென்று பார்ப்பதையோ அல்லது தொடர்பு கொள்ள முயற்சிப்பதையோ தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது என்று பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிவுறுத்தலில் கூறியுள்ளது. விஜய் குமார் (ADG, M&C) கையொப்பத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போதும் அதற்குப் பிறகும், பல மூத்த ராணுவ அதிகாரிகள் அவ்வப்போது ஊடகங்கள் முன் தோன்றி ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை வழங்கினர். இந்த அதிகாரிகள் ஊடகங்களில் தொடர்ச்சியாக தோன்றிய நிலையில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவல்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய செய்திகளை சேகரித்து வெளியிட பல ஊடகங்கள் போட்டி போட்டு ஆர்வம் காட்டின. இது மிகப்பெரிய சங்கடத்தை குறிப்பிட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஏற்படுத்திய நிலையில், இப்படியொரு அறிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
June 04, 2025 6:45 PM IST
ராணுவ அதிகாரிகளின் தனிப்பட்ட தகவல்களை பகிரங்கப்படுத்தக் கூடாது; பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்…

