தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகாவில், தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை 10 மணி நேரமாக உயர்த்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகாவில் இதுவரை 9 மணி நேர வேலை திட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் நாள்தோறும் கூடுதலாக ஒரு மணி நேரம் வேலை பார்க்க அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961 இல் திருத்தம் கொண்டு வர அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தினசரி வேலை நேரம் 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் நேர பணியையும் ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அம்மாநில தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய வேலை நேரத் திட்டம் அலுவலகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பொருந்தும் என கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.
அண்மையில் ஆந்திர மாநிலத்தில் ஒரு நாளைக்கு தொழிலாளர்களை 10 மணி நேரம் வேலை வாங்கும் வகையில் தொழிலாளர்கள் நல சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. அதைத்தொடர்ந்து கர்நாடக அரசும் பணி நேரத்தை உயர்த்துவதற்காக திட்டமிட்டுள்ளது. அதேநேரம் கர்நாடக அரசு பணி நேரத்தை நீட்டிப்பதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

