கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில் தர்மஸ்தலா. இக்கோயிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மைப் பணியாளர் கடந்த ஜூன் மாதம் தட்சிண கன்னடா காவல்நிலையத்தில் சரணடைந்து அளித்த வாக்குமூலம், ஒட்டுமொத்த கர்நாடகாவையே கதிகலங்க வைத்தது.
1995-ஆம் ஆண்டிலிருந்து 2014-ஆம் ஆண்டு வரை, தர்மஸ்தலா கோவிலில் பல பெண்கள் மற்றும் மாணவிகளின் உடல்களை அடக்கம் செய்யச் சொல்லி, கோயில் நிர்வாகத்தினர் தன்னை கட்டாயப்படுத்தியாக கூறி அவர் அதிர வைத்தார். உடல்களை புதைக்காவிட்டால் தன்னையும் கொன்று விடுவதாக மிரட்டியதாக கூறியவர், பல பெண்களை பள்ளி சீருடையிலேயே புதைத்து இருப்பதாக அதிகாரிகளை அலற விட்டுள்ளார்.
அப்படி புதைக்கப்பட்ட பெண்களின் உடல்களில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்களும், சில நேரம் ஆசிட் தழும்புகளும் தென்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். உயிர் பயத்தால் 10 ஆண்டுகளுக்கு முன் தர்மஸ்தலாவை விட்டு குடும்பத்துடன் வெளியேறி அண்டை மாநிலத்தில் மறைந்து வாழ்ந்ததாக குறிப்பிட்ட அவர் மனசாட்சி உறுத்தலால் இந்த உண்மைகளை தற்போது வெளிப்படுத்துவதாக கூறியிருக்கிறார்.
கடந்த 11ஆம் தேதி அவர் பெல்தங்கடி நீதிமன்றத்திலும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது சமீபத்தில் தோண்டி எடுக்கப்பட்ட உடல்களின் புகைப்படங்களையும் புதைக்கப்பட்டதாக கூறப்படும், சில பெண்களின் எலும்புகள் என சிலவற்றையும், போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளார்.
தர்மஸ்தலா கோயிலை சுற்றி பெண்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருப்பது உண்மையா? அதற்கு யார் காரணம்? அப்பெண்களுக்கு நேர்ந்தது என்ன? என பலரும் கேள்வி கர்நாடகாவில் காட்டுத்தீயாய் பரவியது. அப்போதுதான் மற்றொரு புகார் – வழக்கை விஸ்வரூபம் எடுக்க வைத்தது. 2003ஆம் ஆண்டு, தன்னுடை மகள் தர்மஸ்தலாவில் காணாமல் போனதாக, கடந்த 15-ஆம் தேதி, பெண் ஒருவர் தட்சின கன்னடாவின் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
அதன் பின்னர் இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க, சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் எத்தனை பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதைக் கண்டறிய, அப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக காணாமல் போன பெண்களின் பட்டியலை சேகரிக்க தொடங்கினர்.
இந்த நிலையில், தர்மஸ்தலா கிராமத்தின் நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அடுத்தக்கட்டமாக ஆற்றங்கரையில் புதைக்கப்பட்ட உடல்களைத் தோண்டும் பணியை கர்நாடக காவல்துறை தற்போது தொடங்கியுள்ளது. தர்மஸ்தலா குளத்தை தவிர்த்து, நேத்ராவதி ஆற்றுக்கு அருகிலுள்ள ஒரு காட்டில் 13 இடங்களில் உடல்களை தோண்டி எடுக்கும் பணி தொடங்கியது. அவை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்படுகிறது.
வழக்கின் சாட்சியாக இருக்கும் முன்னாள் ஊழியரையும் நேரில் அழைத்து வந்து உடல்கள் புதைக்கப்பட்ட இடங்கள் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளது. நேத்ராவதி ஆற்றங்கரையில் மனித எலும்புகள் கைப்பற்றப்பட்டால் கர்நாடாகவில் இச்சம்பவம் பெரும் பரபரப்பு பேசுபொருளாகவும் மாறும் அதன் பின்னர் இதன் குற்றப்பின்னணி குறித்தும் அதில் தொடர்புடைய நபர்கள் பற்றிய விசாரணையும் தீவிரமாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தர்மஸ்தலா விவகாரம் மீண்டும் கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
July 29, 2025 6:44 PM IST
புதைக்கப்பட்ட பெண்களின் உடல்களில் ஆசிட் தழும்புகள்.. திகிலூட்டும் மர்மம் விலகுமா? – மீண்டும் பூதாகரமாகும் தர்மஸ்தலா கொடூர சம்பவம்!
