Last Updated:
பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இந்தியாவில் கராச்சி பேக்கரி பெயரை மாற்ற இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்று கராச்சி. இந்த நகரத்தின் பெயரில் இந்தியாவில் பிரபல பேக்கரி கடை ஒன்று கடந்த 1953ஆம் ஆண்டில் இருந்து இயங்கிவருகிறது. இந்தக் கடைக்கு இந்தியா முழுக்க பல்வேறு நகரங்களிலும் கிளைகளும் உள்ளன.
காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப்பயணிகள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா, பாகிஸ்தான் மீது ராஜாங்க ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து 7ஆம் தேதி அதிகாலை 1.05 மணிக்கு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் மற்றும் எல்லைக்கோடு பகுதியான (LOC), ஆகிய பகுதிகளில் இருந்த ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.
இது இன்று காலை முதல் இந்தியாவில் பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், இந்தியாவில் இயங்கிவரும், கராச்சி பேக்கரிக்கு எதிராக இந்து அமைப்புகளில் ஒன்றான ஜன ஜாகரண சமிதி (ஜேஜேஎஸ்) எனும் அமைப்பு போராடியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள வெங்கோஜிபாலம் எனும் பகுதியில் கராச்சி பேக்கரியின் கிளை ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தப் பேக்கரி முன்பாக இன்று குவிந்த ஜன ஜாகரண சமிதி அமைப்பினர் கையில் இந்தியத் தேசியக் கொடியுடன், கடையின் பெயரை உடனடியாக மாற்றக் கோரி போராடினர். பெயர் மாற்றப்படாவிட்டால், தேசத்துரோக வழக்குத் தொடர வேண்டும் என மத்திய அரசையும் அந்த அமைப்பினர் வலியுறுத்தினர்.
இந்திய பிராண்டான கராச்சி பேக்கரியின் நிறுவனர் கான்சந்த் ராம்நானி. இந்து மதத்தைச் சேர்ந்த இவர், 1947-ல் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது கராச்சியில் இருந்து வெளியேறி இந்தியாவின் ஐதராபாத் பகுதியில் குடியேறினார். பின்னர் இங்கு கராச்சி பேக்கரியை திறந்தவர், தற்போது நாடு முழுக்க பல்வேறு கிளைகளுடன் அது இயங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

